சாலை மையத்தடுப்பில் மோதி பால்வேன் கவிழ்ந்தது; டிரைவர் பலி
தோவாளை அருகே சாலை மையத்தடுப்பில் மோதி பால்வேன் கவிழ்ந்தது. இதில் டிரைவர் பரிதாபமாக பலியானார். தொடரும் விபத்துகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஆரல்வாய்மொழி:
தோவாளை அருகே சாலை மையத்தடுப்பில் மோதி பால்வேன் கவிழ்ந்தது. இதில் டிரைவர் பரிதாபமாக பலியானார். தொடரும் விபத்துகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தனியார் பால்வேன்
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மேலநத்தம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மகன் நம்பிபாலன் (வயது 28). இவர் தனியார் பால் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் நம்பிபாலன் ஓட்டும் வேனில் நேசராஜ் (27) என்பவர் கிளீனராக இருந்தார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு வேனில் பால் ஏற்றிக் கொண்டு நம்பிபாலனும், நேசராஜூம் புறப்பட்டனர்.
மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்தது
தோவாளையை அடுத்த குமரன்புதூர் விலக்கு பகுதியில் அதிகாலை 4.30 மணிக்கு வந்த போது சாலையின் மையத்தடுப்பு மீது வேன் மோதியது. இந்த விபத்தில் பால் வேன் சாலையில் கவிழ்ந்தது.
இதில் நம்பிபாலன், நேசராஜ் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். மேலும் வேனின் இடிபாடுகளில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தனர்.
அப்போது துலுக்கர்பட்டியில் இருந்து கருங்கல் பகுதிக்கு சிமெண்டு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு டெம்போ வந்தது. இந்த டெம்போ கவிழ்ந்து கிடந்த பால்வேன் மீது மோதியது. இதில் டெம்போவை ஓட்டி வந்த பேச்சிப்பாறையை சேர்ந்த அஜிகுமார்(52) என்பவர் காயமின்றி தப்பினார்.
டிரைவர் பலி
இதுபற்றி அஜிகுமார் கொடுத்த தகவலின் பேரில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் கவிழ்ந்து கிடந்த பால் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய 2 பேரையும் பல மணிநேரம் போராடி மீட்டனர். இதில் டிரைவர் நம்பிபாலன் சம்பவ இடத்திலேயே பலியானார். கிளீனர் நேசராஜ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார்.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
உடனே அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நம்பிபாலனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து நடந்த இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
மையத்தடுப்பால் தொடரும் விபத்துகள்
சகாயநகர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேனும், அரசு பஸ்சும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் 4 பேர் பலியானார்கள்.
இதனை தொடர்ந்து விபத்தை தடுப்பதற்காக சகாயநகர் பகுதி மற்றும் குமரன்புதூர் விலக்கு பகுதியில் சாலையின் நடுவே சிமெண்டு தடுப்பு அமைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி தடுப்பு வைக்கப்பட்டன. ஆனால் இப்போது அந்த மையத்தடுப்பே விபத்தை ஏற்படுத்தி வருகிறது.
வேளாங்கண்ணிக்கு சென்று விட்டு வந்த பயணிகள் வேன் ஒன்று மையத்தடுப்பு மீது மோதியது. இதில் பயணிகள் லேசான காயத்துடன் தப்பினர். குமரன்புதூர் பகுதியில் நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பஸ் சாலையின் மையத்தடுப்பு மீது மோதியது. இதில் 8 பேர் காயமடைந்தனர். மையத்தடுப்பு வைத்தபிறகு அந்த பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகிறது.
விரிவாக்கம் செய்ய வேண்டும்
விபத்து நடந்த பகுதி குறுகிய சாலையாக உள்ளது. இதில் சாலை மையத்தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. அதே சமயத்தில் புதிதாக வரும் டிரைவர்களுக்கு சாலையின் நடுவே மையத்தடுப்பு அமைந்திருப்பது தெரிவதில்லை. இதனால் வேகமாக வரும் வாகனங்கள் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன. எனவே அந்த பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்து மையத்தடுப்பு அமைக்க வேண்டும். அதுவரை சாலையில் மையத்தடுப்பு தேவையற்றது என்றும், இல்லையென்றால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். இந்த தொடர் விபத்துகள் அந்த பகுதி பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.