விசைப்படகுகளுக்கு 8 நாட்களில் தடை நீங்குகிறது
குமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகுகளுக்கு 8 நாட்களில் தடைக்காலம் நீங்குகிறது. இதையொட்டி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகிறார்கள்.
குளச்சல்,
குமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகுகளுக்கு 8 நாட்களில் தடைக்காலம் நீங்குகிறது. இதையொட்டி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகிறார்கள்.
மீன்பிடி தடைக்காலம்
மீன்களின் இனப்பெருக்க காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 61 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைக்காலம் 2 பருவமாக கடைபிடிக்கப்படுகிறது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி போன்ற கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந்் தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு விசைப்படகு ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும். இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்து செல்வார்கள்.
31-ந் தேதி முடிகிறது
இந்த வருடம் குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் தடைக்காலம் தொடங்கியது. இதையொட்டி குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பி மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன. இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை பழுது பார்த்தல், வலைகளை பின்னுதல் போன்ற பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
தடைக்காலம் வருகிற 31-ந் தேதி முடிவடைகிறது. இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் விசைப்படகு மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தங்கள் விசைப்படகுகளை தீவிரமாக பழுது பார்த்து வருகின்றனர்.