மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு
பழனி முருகன் கோவிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் பணியை புறக்கணித்தனர்.
பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துவதற்காக திருஆவினன்குடி, கிரிவீதி, சண்முகநதி உள்ளிட்ட இடங்களில் முடி காணிக்கை நிலையங்கள் உள்ளன. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். பழனி கோவிலில் முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கான பதிவுச்சீட்டில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களின் புகைப்படத்துடன் கூடிய விவரம் வழங்க அறநிலையத்துறை முடிவு செய்தது. இந்த புதிய பதிவுச்சீட்டு நடைமுறைக்கு பழனி கோவில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று திருஆவினன்குடி முடி காணிக்கை தொழிலாளர்கள் நேற்று இரவு 7.30 மணி அளவில் திடீரென பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் முடி கொட்டகை வெறிச்சோடியது. மேலும் அங்கு வந்த பக்தர்கள், முடி காணிக்கை செலுத்த முடியாமல் சிரமப்பட்டனர். அதைத்தொடர்ந்து கோவில் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.