ஆலவயல் ஊராட்சியில் நடைபெற இருந்த பிச்சை எடுக்கும் போராட்டம் ஒத்திவைப்பு


ஆலவயல் ஊராட்சியில் நடைபெற இருந்த பிச்சை எடுக்கும் போராட்டம் ஒத்திவைப்பு
x

தாசில்தார் அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதால் ஆலவயல் ஊராட்சியில் நடைபெற இருந்த பிச்சை எடுக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை

பிச்சை எடுக்கும் போராட்டம்

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் ஊராட்சியில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களாக 12 தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு நிலையான அரசு ஊதியம் மற்றும் 40 மாத சம்பள பாக்கியை உடனே வழங்கக்கோரி மாவட்ட உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் ஆலவயல் முதல் பொன்னமராவதி வரை பிச்சை எடுக்கும் போராட்டம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து பொன்னமராவதி தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முகமது அலிஜின்னா, சி.பி.எம். ஒன்றிய செயலாளர் பக்ருதீன், சி.ஐ.டி.யு. மாவட்ட குழு உறுப்பினர் தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தற்காலிகமாக ஒத்திவைப்பு

கூட்டத்தில், ஆலவயல் ஊராட்சியில் 12 மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு தற்காலிக ஊதியமாக 12 மாதங்களுக்கு மொத்தம் ரூ.3 ஆயிரம் உடனடியாக வழங்கப்படும் எனவும், மாவட்ட நிலை அலுவலரிடம் பேசி வேறு நிதி தொகுப்பில் இருந்து தவணை முறையில் சம்பளம் வழங்க சாத்தியக்கூறுகள் இருப்பினும் மேற்படித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. மேலும் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து அதற்கான தொகையினை நீர்த்தேக்க தொட்டியினை சுத்தம் செய்த ஆபரேட்டர்களே பெற்றுக்கொள்ளுமாறு உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து தாசில்தார் அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதால் ஆலவயல் ஊராட்சியில் நடைபெற இருந்த பிச்சை எடுக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.


Next Story