2 மாதத்திற்கு பிறகு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் படகுகள் கரை திரும்பின


2 மாதத்திற்கு பிறகு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் படகுகள் கரை திரும்பின
x

தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரத்தை சேர்ந்த பல படகுகள் கரை திரும்பின.

ராமநாதபுரம்

ராமேசுவரம

61 நாள் தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரத்தை சேர்ந்த பல படகுகள் கரை திரும்பின. இறால்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மீனவர்கள் உள்ளனர்.

ராமேசுவரம் படகுகள்

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதியில் இருந்து தொடங்கிய 61 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தது.

இந்த நிலையில் ராமேசுவரத்தில் இருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் வியாழக்கிழமை காலைதான் கரை திரும்பவேண்டும். ஆனால் பல விசைப்படகுகளில் இறால் மீன்கள் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட மீன்களுடன் கரை திரும்பிய சிறிய விசைப்படகுகள் அந்த மீன்களை வியாபாரிகளிடம் கொடுத்துவிட்டு மீண்டும் ஐஸ்கட்டி, டீசல் ஏற்றிவிட்டு மீன்பிடிக்க புறப்பட்டு சென்றன.

விலை கிடைக்குமா?

இதுபற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் சேசுராஜா கூறியதாவது:-

2 மாத தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலையில் இறால் மீன்கள் ஓரளவு கிடைத்துள்ளதாக தெரிகிறது. அனைத்து படகுகளும் கரை திரும்பிய பின்னர்தான் இறால் உள்ளிட்ட அனைத்து வகை மீன்களின் வரத்து குறித்து முழுமையாக தெரியவரும். தற்போதுவரை திரும்பியுள்ள படகுகளில் இறால் மீன்கள் 100-ல் இருந்து 150 கிலோ வரை கிடைத்துள்ளன.

இறால் மீன்களுக்கு என்ன விலை என்று வியாபாரிகள் முடிவு செய்யவில்லை. இந்த ஆண்டாவது நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மீனவர்களின் எதிர்பார்ப்பாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மீன்பிடிக்கச் சென்ற அனைத்து விசைப்படகுகளும் காலை 11 மணிக்குள் கரை திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவே மீன்களை வாங்கிச் செல்வதற்காக தூத்துக்குடி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்கள் இரவு முதலே ராமேசுவரம் துறைமுக பகுதியில் அணிவகுத்து நிறுத்தப்பட்டன.


Next Story