இடுகாட்டு நிலப்பிரச்சினையில் இறந்த முதியவரின் உடலை தூக்கி சென்று அடக்கம் செய்த பெண்கள்
பணகுடி அருகே இடுகாட்டு நிலப்பிரச்சினை தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தபோது, இறந்த முதியவரின் உடலை பெண்களே தூக்கி சென்று அந்த இடத்தில் அடக்கம் செய்தனர்.
பணகுடி:
பணகுடி அருகே இடுகாட்டு நிலப்பிரச்சினை தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தபோது, இறந்த முதியவரின் உடலை பெண்களே தூக்கி சென்று அந்த இடத்தில் அடக்கம் செய்தனர்.
இடுகாட்டு நிலப்பிரச்சினை
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே லெப்பைகுடியிருப்பு இந்திரா காலனியில் 100-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடுகாடு இல்லாததால், ஊருக்கு கீழ்பக்கம் உள்ள அனுமன் ஓடை கரையோரம் புதைத்து வந்தனர். தொடர்ந்து இடுகாட்டுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக 8 சென்ட் நிலத்தை இடுகாடாக பயன்படுத்துவதற்கு வருவாய் துறையினர் ஒதுக்கி கொடுத்தனர். இதற்கிடையே, அந்த இடம் தனிநபருக்கு சொந்தமானது என்று கூறி, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
உடலை தூக்கி வந்து அடக்கம் செய்த பெண்கள்
இந்த நிலையில் இந்திரா காலனியைச் சேர்ந்த முதியவர் சுந்தர்ராஜ் வயது மூப்பின் காரணமாக இறந்தார். இதையடுத்து அரசு இடுகாட்டுக்கு வழங்கிய இடத்தில் சுந்தர்ராஜின் உடலை அடக்கம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்தனர். இதற்கிடையே அந்த இடம் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால், பழைய இடத்திலேயே அடக்கம் செய்யுமாறு வருவாய் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
எனினும் சுந்தர்ராஜின் உடலை பெண்களே தூக்கி சென்று, அரசு இடுகாட்டுக்கு ஒதுக்கிய இடத்திலேயே அடக்கம் செய்தனர். அங்கு பாதுகாப்புக்கு ஆண் போலீசாரே இருந்ததால், அவர்களால் பெண்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.