குளச்சல் மீனவரின் உடல் ராமேசுவரத்தில் கரை ஒதுங்கியது


குளச்சல் மீனவரின் உடல் ராமேசுவரத்தில் கரை ஒதுங்கியது
x
தினத்தந்தி 11 Oct 2023 12:15 AM IST (Updated: 11 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாடு கடல் பகுதியில் படகு கவிழ்ந்து மாயமான குளச்சல் மீனவர் உடல் ராமேசுவரத்தில் கரை ஒதுங்கியது.

கன்னியாகுமரி

குளச்சல்:

மணப்பாடு கடல் பகுதியில் படகு கவிழ்ந்து மாயமான குளச்சல் மீனவர் உடல் ராமேசுவரத்தில் கரை ஒதுங்கியது.

படகு கவிழ்ந்தது

குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் பி.ஆரோக்கியம் (வயது 50). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன் பிடித்தொழில் செய்து வருகிறார்.

கடந்த மாதம் 25-ந்தேதி இவருக்கு ெசாந்தமான படகின் பங்குதாரரான மாதா காலனியை சேர்ந்த ஆன்றோ (47), அதே பகுதியை சேர்ந்த கே.ஆரோக்கியம் (52), கொட்டில்பாட்டை சேர்ந்த பயஸ் (54) உள்பட 16 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

28-ந்தேதி நள்ளிரவு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகு திடீரென கடலில் மூழ்கியது. உடனே மீனவர்கள் கடலில் குதித்து தத்தளித்தனர். அப்போது அந்த வழியாக வந்த மற்றோரு விசைப்படகில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்த 13 பேரை மீட்டனர். பயஸ், ஆன்றோ, கே.ஆரோக்கியம் ஆகிய 3 மீனவர்கள் மாயமாகினர்.

2 பேரின் உடல் மீட்பு

மாயமான 3 மீனவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் 30-ந்தேதி பயஸ்சின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து கடந்த 10 நாட்களாக கடற்படை துணையுடன் ஆன்றோ, கே.ஆரோக்கியம் ஆகியோரை தேடி வந்தனர்.

9-ந்தேதி விசைப்படகு மூழ்கிய இடத்தில் இருந்து 50 மீட்டர் ஆழத்தில் ஆன்றோவின் உடல் மீட்கப்பட்டது. பின்னர், அவரது உடல் குளச்சல் கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து மாயமான கே.ஆரோக்கியத்தையும் விரைந்து மீட்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ராமேசுவரத்தில் கரை ஒதுங்கியது

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் ராமேசுவரம் அருகே உள்ள நடுவத்துறை கடற்கரையில் ஒரு ஆண் பிணம் கரை ஒதுங்கி உள்ளதாக குளச்சல் மீனவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குளச்சல் மீனவர்கள் மற்றும் கே.ஆரோக்கியத்தின் உறவினர்கள் ராமேசுவரம் சென்றனர்.

இதற்கிடையே கரை ஒதுங்கிய பிணத்தை ராமேசுவரம் கடலோர காவல்படையினர் மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உறவினர்கள் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த பிணத்தை பார்த்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் கே.ஆரோக்கியத்தின் வலது கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 'பிளேட்' வைக்கப்பட்டிருந்த தழும்பு உண்டு என அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். அந்த தழும்பு ராமேசுவரத்தில் கரை ஒதுங்கிய ஆண் உடலிலும் காணப்பட்டதால் கே.ஆரோக்கியத்தின் உடல்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று(புதன்கிழமை) இரவு அல்லது நாளை குளச்சலுக்கு கொண்டு வரப்படும் என மீனவர்கள் தெரிவித்தனர்.


Next Story