ரத்தக்காயத்துடன் பிணமாக கிடந்த வாலிபர் அடையாளம் தெரிந்தது


ரத்தக்காயத்துடன் பிணமாக கிடந்த வாலிபர் அடையாளம் தெரிந்தது
x

பட்டுக்கோட்டை போலீஸ் நிலையம் அருகே ரத்தக்காயத்துடன் பிணமாக கிடந்த வாலிபர் யார் என்று அடையாளம் தெரிந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை போலீஸ் நிலையம் அருகே ரத்தக்காயத்துடன் பிணமாக கிடந்த வாலிபர் யார் என்று அடையாளம் தெரிந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரத்தக்காயத்துடன் வாலிபர் பிணம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து வெண்டாக்கோட்டை செல்லும் சாலையில் பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையம் அருகே கடந்த 9-ந் தேதி காலையில் ரத்தக்காயத்துடன் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சுமதி பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசில் புகார்

பிணமாக கிடந்த வாலிபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர், அவர் எப்படி இறந்தார் என பட்டுக்கோட்டை நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே பட்டுக்கோட்டை அருகே சூராங்காடு கிராமத்தை சேர்ந்த கோமதி (வயது 30) என்பவர், தனது கணவர் வீரமுத்துவை(35) காணவில்லை என பட்டுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்து இருந்தார். பிணமாக கிடந்தவர் கோமதியின் கணவராக இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் போலீசார், அவரை பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பிணமாக கிடந்த வாலிபரின் உடலை காண்பித்தனர்.

கொலை செய்யப்பட்டாரா?

அப்போது அந்த உடலை பார்த்த கோமதி, இது தனது கணவர் வீரமுத்துவின் உடல் என்று தெரிவித்துள்ளார். பெயிண்டரான வீரமுத்து, சம்பவத்தன்று வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை என்றும், அவரது சாவில் சந்தேகம் உள்ளது என்றும் கோமதி, பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமுத்து உடலில் ரத்த காயங்கள் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story