தற்கொலை செய்த வாலிபரின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு
திருப்பரங்குன்றம் அருகே தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலை போலீசிற்கு தெரியாமல் எரித்தனர். இது தொடர்பாக தந்தை உள்பட 6 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலை போலீசிற்கு தெரியாமல் எரித்தனர். இது தொடர்பாக தந்தை உள்பட 6 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை
திருப்பரங்குன்றம் அருகே உள்ள கூத்தியார்குண்டு ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் காஞ்சிவனத்துரை. இவரது மகன் வருண் (வயது 23) பி.காம்.சி.ஏ.படித்து மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வருண் அவரது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் வருணின் உடலை அதே பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு கொண்டுசென்று எரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசில் கிராம நிர்வாக அதிகாரி புகார் செய்தார்.
6 பேர் மீது வழக்கு
அதன்பேரில் வருணின் தந்தை காஞ்சி வனத்துரை, காஞ்சி வனத்துரையின் மகன் பாவஈஸ்வரன் மற்றும் அவரது உறவினர்கள் கார்த்திக், பிரவீன், பிச்சைராஜா, வேல் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வருணின் உடல் முழுவதும் எரிக்கப்பட்டுவிட்டதால் அவரது எலும்பு மற்றும் சாம்பல் ஆகியவற்றை சுடுக்காட்டில் இருந்து எடுத்து ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருண் தற்கொலை செய்ய காரணம் என்ன? போலீசிற்கு தெரியாமல் வருணின் உடலை எரிக்க காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் மேல் விசாரணை செய்து வருகின்றனர். வருண் தற்கொலை செய்துகொண்டதும், அவரது உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்ததும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.