மலை ரெயில் டீசல் என்ஜினின் பாய்லர் வெடித்ததால் பரபரப்பு
மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே சோதனை ஓட்டத்தின் போது, மலை ரெயில் டீசல் என்ஜினின் பாய்லர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி,
மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே சோதனை ஓட்டத்தின் போது, மலை ரெயில் டீசல் என்ஜினின் பாய்லர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதிய டீசல் என்ஜின்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரெயில் கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. இந்த ரெயிலில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணித்து வருகின்றனர். மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே பர்னஸ் ஆயில் மூலம் இயங்கும் நீராவி என்ஜின் மூலம் ரெயில் இயக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் நிலக்கரி மூலம் இயங்கும் நீராவி என்ஜினுடன் இயக்கப்பட்டு வந்தது. நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் கோளாறு காரணமாக, திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் மலை ரெயிலுக்கு டீசல் மூலம் இயங்கும் நீராவி என்ஜின் தயாரிக்கும் பணி நடந்தது. பழமை மாறாமல் புதிய தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களுடன் ரூ.9.30 கோடி மதிப்பில் 7 மாதத்தில் டீசலால் இயங்கும் புதிய என்ஜின் தயாரிக்கப்பட்டது.
பாய்லர் வெடித்தது
கடந்த 5-ந் தேதி திருச்சியில் இருந்து மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு டீசல் என்ஜின் கொண்டு வரப்பட்டது. இந்தநிலையில் கடந்த வாரம் 2 முறை மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே புதிய டீசல் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. புதிய என்ஜின் என்பதால் மலைப்பாதையில் பொறுமையாக இயக்கப்பட்டது. இந்த 2 சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்தநிலையில் நேற்று புதிய டீசல் ரெயில் என்ஜினுடன், ஜல்லிக் கற்களை கொள்கலனில் ஏற்றி, பளுவை இழுத்துக் கொண்டு இயங்கும் வகையில், கல்லார் பகுதியில் இருந்து குன்னூருக்கு 3-வது முறையாக சோதனை ஓட்டம் தொடங்கியது.
அப்போது ரெயிலில் அதிகாரிகள், பணியாளர்கள் உள்பட 15 பேர் பணியில் இருந்ததாக தெரிகிறது. சிறிது தூரம் ரெயில் என்ஜின் சென்றதும், என்ஜினின் முன்பகுதியில் இருந்த பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அதிலிருந்து புகை வெளியேறியது. இதனால் அதிகாரிகள், பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
இதையடுத்து சோதனை ஓட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் பாய்லர் வெடித்ததற்கான காரணம் குறித்து ரெயில்வே தொழில்நுட்ப துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தொடர் சோதனை ஓட்டங்கள் நடத்தி, மலை ரெயில் டீசல் என்ஜின் வெற்றிகரமான நிலையை எட்டிய பின்னரே ரெயில் சேவைக்கு புதிய என்ஜின் பயன்படுத்த உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.