தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி சிறுவன் பலி


தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி சிறுவன் பலி
x

தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குவாகம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 17). இவர் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு அதே கிராமத்தில் ஆடுகளை மேய்க்கும் வேலையை செய்து வந்தார்.

இந்தநிலையில், ராமச்சந்திரன் என்பவரது தோட்டத்தில் ஆடுகளை மேய்ப்பதற்காக பட்டி போட்டு இருந்தார். மேலும், நாய் தொல்லையை கட்டுப்படுத்துவதற்காக அப்பகுதியில் அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் மின்சார வேலி அமைத்ததாக கூறப்படுகிறது.

மின்சாரம் பாய்ந்து பலி

நேற்று காலை வழக்கம்போல் அருண்குமார் தோட்டத்திற்கு வந்தார். அப்போது மின்சார வேலியில் தனது நண்பர்கள் மின்சாரத்தை துண்டித்து இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அதன் மீது கை வைத்துள்ளார். ஆனால் இரவில் செலுத்தப்பட்ட மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்த நிலையில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அருண்குமார் பரிதாபமாக இறந்தார்.

மற்றொரு சம்பவம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பகரை ஊராட்சி சின்ன சூளகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் வனப்பகுதியை ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலத்தில் மின்கம்பம் ஒன்று உள்ளது.

இதில் இருந்து மின்சாரத்தை திருடி, கொட்டாயூரை சேர்ந்த விவசாயி அர்ஜூனன் (வயது 45) மின்வேலி அமைத்திருந்தார். இந்த மின்வேலி மூலம் அவர் காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடி வந்ததாக கூறப்படுகிறது.

டிரைவர் பலி

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கருக்கம்பட்டியை சேர்ந்த டிரைவர் சுரேஷ் (25), சூளகுண்டாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் காட்டுப்பன்றியை வேட்டையாட அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை எதிர்பாராதவிதமாக மிதித்தார்.

இதனால் சுரேசை மின்சாரம் தாக்கியது. இதில், அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்வேலி அமைத்த விவசாயி அர்ஜூனனை கைது செய்தனர்.


Next Story