ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற வாலிபர் கிணற்றில் மூழ்கி பலி


ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற வாலிபர் கிணற்றில் மூழ்கி பலி
x

கிருஷ்ணராயபுரம் அருகே ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற வாலிபர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

கரூர்

கிணற்றில் மூழ்கிய வாலிபர்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள தாரப்புரத்தனூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ராஜா (வயது 23). இவர் தனது ஊருக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள 50 அடி ஆழ கிணற்றுக்குள் ஒரு ஆட்டுக்குட்டி தவறி விழுந்து தத்தளித்தது. இதைக்கண்ட ராஜா கிணற்றில் இறங்கி அதனை மீட்க முயன்றார். அப்போது அவருக்கு நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கினார். இந்தநிலையில் அப்பகுதியில் நின்றவர்கள் ஆட்டை காப்பாற்ற சென்ற ராஜாவை வெகுநேரமாக காணாததால் கிணற்று பகுதியில் சென்று பார்த்தனர். அப்போது கிணற்றின் மேல் பகுதியில் ராஜாவின் செருப்பு மட்டும் இருந்தது. கிணற்றுக்குள் எட்டி பார்த்தபோது ஆட்டுக்குட்டி இறந்த நிலையில் தண்ணீரில் மிதந்தது.

பிணமாக மீட்பு

இதுகுறித்து முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தீயணைப்பு நிலைய அதிகாரி முனியாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கிணற்றில் இறங்கி நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு ராஜாவை பிணமாக மீட்டனர். பின்னர் மாயனூர் போலீசார் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணராயபுரம் தெற்கு கிராம நிர்வாக அதிகாரி ராமானுஜம் கொடுத்த புகாரின்பேரில், மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story