தவறி விழுந்து வாலிபரின் கால் துண்டானது
ஓடும் ரெயிலில் ஏற முயற்சி செய்தபோது தவறி விழுந்து வாலிபரின் கால் துண்டானது
நாகை மாவட்டம் குருவாடி பகுதியை சேர்ந்தவர் நாடிமுத்து மகன் வெங்கடேசன் (வயது 20). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் சென்னைக்கு செல்வதற்காக தனது ஊரிலிருந்து திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். மன்னார்குடியில் இருந்து சென்னை வழியாக வெளிமாநிலத்திற்கு செல்லக்கூடிய ரெயிலில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது ரெயிலானது திருவாரூர் ரெயில் நிலையத்தில் நடைமேடையில் வரும் போது, பொது பெட்டியில் ஏறுவதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை வெளியில் இழுத்துள்ளனர். இதில் அவர் கணுக்கால் துண்டாகியது. இதில் வலியால் துடித்த அவரை பயணிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இருப்பு பாதை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.