கொலை வழக்கில் தொடர்புடைய சிறுவன் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடியதால் பரபரப்பு


கொலை வழக்கில் தொடர்புடைய சிறுவன் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடியதால் பரபரப்பு
x

கொலை வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த சிறுவனை வேலூர் சிறுவர்கள் வரவேற்பு இல்லத்திற்கு பஸ்சில் அழைத்து வந்தபோது போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடினான். கரும்பு காட்டில் பதுங்கிய அவனை போலீசார் 8 மணி நேரத்திற்குள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

திருவண்ணாமலை

கொலை வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த சிறுவனை வேலூர் சிறுவர்கள் வரவேற்பு இல்லத்திற்கு பஸ்சில் அழைத்து வந்தபோது போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடினான்.

கரும்பு காட்டில் பதுங்கிய அவனை போலீசார் 8 மணி நேரத்திற்குள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

சிறுவன் தப்பியோட்டம்

தூத்துக்குடி பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய 17 வயது சிறுவனை வேலூரில் உள்ள கூர்நோக்கு சிறுவர்கள் வரவேற்பு இல்லத்தில் சேர்க்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அதன் பேரில் தூத்துக்குடி போலீசார் சிறுவனை நேற்று பஸ்சில் தூத்துக்குடியில் இருந்து வேலூருக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். சிறுவனுடன் 2 போலீசார் காவலுக்கு வந்திருந்தனர்.

திருச்சியில் இருந்து வேலூர் செல்லும் பஸ்சில் திருவண்ணாமலை வழியாக அவர்கள் வந்தனர்.

அந்த பஸ் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.10 மணியளவில் திருவண்ணாமலையை அடுத்த இனாம்காரியந்தல் பகுதியில் உள்ள சுங்கசாவடி அருகில் சென்றபோது திடீரென பழுது ஏற்பட்டு நிறுத்தப்பட்டது.

அப்போது பஸ்சில் போலீசாருடன் அமர்ந்து இருந்த அந்த சிறுவன் திடீரென அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினான். போலீசார் அந்த சிறுவனை துரத்தி சென்றனர்.

ஆனால் அந்த சிறுவன் அருகில் உள்ள புதர்பகுதி வழியாக ஓடி இருளில் மறைந்து விட்டான்.

இதனையடுத்து சிறுவனுடன் வந்த போலீசார் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் தாலுகா போலீசார் சிறுவன் தப்பியோடிய பகுதியில் தேடினர். அப்போது அங்குள்ள தனியார் பள்ளியின் பின்புறம் உள்ள கரும்பு தோட்டத்திற்கு சிறுவன் ஓடி சென்றது தெரியவந்தது.

சுற்றிவளைத்து பிடித்தனர்

இரவு நேரம் என்பது அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை சுமார் 7 மணியளவில் திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் கரும்பு தோட்டத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த சிறுவன் சென்ற பாதையில் இருந்து கரும்புகள் முறிந்து இருந்த அடையாளத்தை வைத்து சிறுவன் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

பின்னர் காலை சுமார் 8 மணியளவில் அச்சிறுவனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதையடுத்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் விசாரணை நடத்திய பின்னர் அந்த சிறுவனை வேலூரில் உள்ள சிறுவர் வரவேற்பு இல்லத்திற்கு தூத்துக்குடி போலீசார் அழைத்து சென்றனர்.

தப்பியோடிய சிறுவனை 8 மணி நேரத்திற்குள் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story