பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் பிடிபட்டார்
மணப்பாறையில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மணப்பாறை, ஜுன்.18-
மணப்பாறையில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சங்கிலி பறிப்பு
மணப்பாறை தெற்கு லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி கோமளா தேவி (வயது 28). இவர் விராலிமலை ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் தனது மகனை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கோமளா தேவியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால் அவர் சப்தமிட்டபடியே, சங்கிலியை இறுகப்பிடித்துக் கொண்டு ஆசாமிகளுடன் போராடினார்.
பிடிபட்டார்
இதை கவனித்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். இதனையடுத்து ஆசாமிகள் தப்பி ஓட முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் செல்லையா ஆட்டோவை குறுக்கே நிறுத்தி ஆசாமிகளை மடக்கிப் பிடிக்க முயன்றார். இதில் மோட்டார் சைக்கிளுடன் ஆட்டோ மீது மோதிய ஆசாமிகள் கீழே விழுந்தனர். இதைப்பார்த்த பொதுமக்கள் உடனே ஓடிச் சென்று, அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் ஒருவன் பிடிபட்டான். மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான்.
பின்னர் பிடிபட்டவனை அப்பகுதி மக்கள் மணப்பாறை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவன் நாகை மாவட்டம், காடம்பாடி சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது 28), என்றும், தப்பியோடியவன் திருச்சி எட்டரைகோப்பு பகுதியைச் சேர்ந்த நவீன் (28) என்பதும் தெரியவந்தது. உரிய நேரத்தில் ஆட்டோ டிரைவர் சமயோசிதமாக செயல்பட்டதால் வழிப்பறி திருடன் சிக்கி கொண்டான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்பத்திரியில் அனுமதி
தப்பி ஓடியபோது, கீழே விழுந்து காயம் அடைந்த விஜய்யை சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.