சிறுவனை சூடுவைத்து சித்ரவதை செய்ததால் பரிதாப சாவு
ஆரணி அருகே முதல் கணவருக்கு பிறந்த சிறுவனுக்கு சூடு வைத்தும், சுடுநீரை உடலில் ஊற்றியும் சித்ரவதை செய்ததால் பரிதாபமாக உயிரிழந்தான்.
ஆரணி அருகே முதல் கணவருக்கு பிறந்த சிறுவனுக்கு சூடு வைத்தும், சுடுநீரை உடலில் ஊற்றியும் சித்ரவதை செய்ததால் பரிதாபமாக உயிரிழந்தான்.
2-வது கணவருடன் குடும்பம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சந்தவாசல் காங்கிரனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். இவருடைய மகள் ஜெயசுதா (வயது 29). இவருக்கும், குணசேகரன் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த சிறிது காலத்திலேயே கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், குணசேகரன் தனது மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இருப்பினும், அவர்களுக்கு ஏனோக்ராஜ் (2) என்ற மகன் உண்டு.
இந்தநிலையில் சேவூர் அருகர்தெருவில் மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தவரும் தாய்மாமனான மாணிக்கம் (31) என்பவரை ஜெயசுதா 2-வது கணவராக ஏற்றுக்கொண்டு, அவருடன் ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தார். அவர்களுடன் ஏனோக்ராஜும் வளர்ந்து வந்தான்.
கொடுமை
அவன், மாணிக்கம் வீட்டில் இருப்பது அவருக்கு பிடிக்கவில்லை, எனத் தெரிகிறது. இதனால் மாணிக்கம், ஜெயசுதாவிடம் யாருக்கோ பிறந்த குழந்தையை நான் ஏன் வைத்து வளர்க்க வேண்டும்? எனக் கேட்டு வந்ததால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.
இதனால், அவர்களுக்கு இடையே தொடர்ந்து தகராறும் நடந்து வந்தது. மேலும் கோபத்தில் இருந்து வந்த மாணிக்கம், சிறுவன் ஏனோக்ராஜ் மீது வெந்நீரை எடுத்து ஊற்றுவது, சாதம் வடித்த சுடு கஞ்சியை அவன் மீது ஊற்றுவது, சூடாக இருக்கும் கஞ்சி பாத்திரத்தை அவன் மீது வைப்பது என சூடுவைத்து கொடுமை செய்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.
பரிதாப சாவு
இவ்வாறு கொடுமைப்படுத்தி வந்ததில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதற்காக அவனை கடந்த அக்டோபர் மாதம் 23-ந்தேதி ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, வீடு திரும்பினர்.
மேற்கண்ட சம்பவம் தொடர்பாக ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிறுவன் ஏனோக்ராஜுக்கு வலி அதிகமாகியது. உடலில் பல இடங்களில் கொப்புளங்கள் உருவாகின. அவன், ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் ஏனோக்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தான்.
சிறையில் அடைப்பு
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் ஏற்கனவே பதிவு செய்திருந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து ஜெயசுதாவின் 2-வது கணவராக குடும்பம் நடத்தி வந்த கூலித்தொழிலாளி மாணிக்கத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.