மாங்காய் பறித்த சிறுவன், தடுமாறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தான்
ஸ்ரீவில்லிபுத்தூரில் மாங்காய் பறித்த சிறுவன், தடுமாறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தான்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் அருேக உள்ள அயன்கரிசல்குளத்தை சேர்ந்தவர் மாரிசாமி. இவருடைய மகன் சூர்யா (வயது 6). இவன் அதேபகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தான்.
இதையடுத்து பாட்டியுடன் வெளியே சென்றிருந்த அவன், ஒரு கிணறு அருகே உள்ள மாமரத்தில் மாங்காய் தாழ்வாக கிடப்பதை பார்த்துள்ளான். அங்கு ஓடிச்சென்று மாங்காய் பறிக்க முயன்றான். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றில் விழுந்தான்.
இதற்கிடையே பேரனை காணாது பாட்டி அலறினார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தேடினர். பின்னர் கிணற்றில் இருந்து சிறுவன் சூர்யா பிணமாக மீட்கப்பட்டான்.
அவனது உடலை பார்த்து குடும்பத்தினரும், உறவினர்களும் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சிறுவனின் உடலை பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.