வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு:மலேசியாவில் இருந்து விமானத்தில் பறந்து வந்து காதலியை கரம்பிடித்த காதலன்திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்
வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்ததால், மலேசியாவில் இருந்து விமானத்தில் பறந்து வந்து காதலியை அவரது காதலன் கரம்பிடித்தார். இந்த காதல் ஜோடியினர் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
திண்டிவனம்,
6 ஆண்டு காதல்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் ஆல்வின்(வயது 23). இவர் மலேசியாவில் தங்கி, அங்குள்ள சிற்பக்கூடத்தில் பணிபுரிந்து வருகிறார்.
ஆல்வினும் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகளும், பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவியுமான ஜனனி(19) என்பவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதலுக்கு, ஜனனியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், படிப்பு முடிந்ததும், மாப்பிள்ளை பார்த்து ஜனனியை திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தனர்.
மலேசியாவில் இருந்து விரைந்தார்
தற்போது படிப்பு முடிய இன்னும் குறுகிய காலமே இருப்பதால், ஜனனி இது பற்றி மலேசியாவில் உள்ள தனது காதலன் ஆல்வினுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து காதலியின் கரம்பற்ற முடிவு செய்த ஆல்வின், மலேசியாவில் இருந்து விமானத்தில் சொந்த ஊருக்கு உடனடியாக திரும்பினார். பின்னர் அவர் ஜனனியை அழைத்துக் கொண்டு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு வந்தார்.
இந்து முறைப்படி திருமணம்
பின்னர் ஆல்வினும், ஜனனியும் தீவனூரில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து ஜனனியின் பெற்றோர் எதிர்ப்பு காரணமாக பாதுகாப்பு கேட்டு ஆல்வின் தனது காதல் மனைவியுடன் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். மேலும் ஜனனி தனது படிப்பை தொடரவும், தனது பெற்றோருடன் வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் ஆல்வின் கூறினார்.
இதற்கிடையே, ஜனனியின் பெற்றோர் வலத்திராக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என்று கூறி புகார் செய்திருந்தனர். காதல் ஜோடி தஞ்சமடைந்தது குறித்து திண்டிவனம் போலீசார் வலத்திரக்கோட்டை போலீஸ் மூலம், ஜனனியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்போில் அவர்கள் திண்டிவனத்துக்கு விரைந்து வந்தனர்.
பெற்றோருடன் செல்ல மறுப்பு
அங்கு ஜனனியை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்களுடன் அழைத்து செல்வதாக போலீசில் தெரிவித்தனர். ஆனால், ஜனனி தனது கணவருடன் தான் செல்வேன் என்று உறுதியுடன் தெரிவித்தார். இதன்பின்னர் ஜனனி கூறியதை அடுத்து அவரிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டு காதல் ஜோடியை பாதுகாப்பாக போலீசார் அனுப்பி வைத்தனர். இதன்பின்னர், காரில் வந்த காதல் பறவைகள், அதே காரில் பறந்து சென்றனர்.