விழுப்புரம் அருகேகர்ப்பமான பிளஸ்-1 மாணவியை கொன்று புதைத்த காதலன் கைதுதிருமணத்துக்கு வற்புறுத்தியதால் தீர்த்து கட்டியது அம்பலம்
விழுப்புரம் அருகே கர்ப்பமான பிளஸ்-1 மாணவியை கொன்று புதைத்த காதலனை போலீசாா் கைது செய்தனா்.
செஞ்சி,
இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விழுப்புரம் அருகே உள்ளது சாலவனூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சுடுகாடு பகுதியில் உள்ள ஏரியில் கடந்த 6-ந்தேதி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.
அப்போது ஒரு பெண்ணின் உடல் அங்கு புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அந்த பெண்ணின் பிரேத பரிசோதனை முடிவு வெளியானது. இதில் கொன்று புதைக்கப்பட்ட பெண்ணுக்கு சுமார் 20 வயதுக்குள் இருக்கும் என்பதும், அவர் 3 மாதம் கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண் அணிந்திருந்த பிங்க் நிற லெக்கின்சும், கருநீல நிற பூப்போட்ட டாப்சும், கவரிங் செயின், ஜிமிக்கி, மூக்குத்தி, சிவப்பு நிற அரைஞாண் கயிறு, பச்சை நீல நிற துணி சுற்றிய கல்பதித்த பிளாஸ்டிக் வளையல் ஆகியவற்றை கைப்பற்றி அதன் மூலம் போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர்.
காதல்
அதில், விழுப்புரம் அருகே உள்ள கண்டமானடி கிராமத்தை சேர்ந்த பிரியதர்ஷினி (வயது 17) என்பதும், அவர் பிளஸ்-1 படித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரது குடும்பத்தினரை அழைத்து போலீசார் விசாரித்ததில், அவர்களும் உறுதிப்படுத்தினர். மேற்கொண்டு அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிரியதர்ஷினியும், சித்தேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பூபாலன் மகன் அகிலன் (23) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 3-ந்தேதி பிரியதர்ஷினி வீட்டில் இருந்து மாயமானதாக அவர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் பதுங்கல்
இதையடுத்து, செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னா மேற்பார்வையில் கஞ்சனூர் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் தனிப்படை அமைத்து, அகிலனை வலைவீசி தேடினர். அதில் அவர் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று, அகிலன், அவருடன் இருந்த நண்பரான கக்கனூரை சேர்ந்த சுரேஷ்குமார்(22) என்பவரையும் மடக்கிப்பிடித்து கஞ்சனூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அங்கு அகிலனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது வெளியான தகவல்கள் பற்றிய விவரம் வருமாறு:-
3 மாதம் கர்ப்பம்
அகிலன், சாவுக்கு மேளம் அடிக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கண்டமானடி கிராமத்தில், மேளம் அடிப்பதற்காக அகிலன் சென்றுள்ளார்.
அப்போது, அங்கு பிரியதர்ஷினியை அவர் சந்தித்துள்ளார். இதன் மூலம் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர் பிரியதர்ஷினியை வெளியில் அழைத்து சென்று அகிலன் உல்லாசம் அனுபவித்துள்ளார். இதில் அவர் 3 மாதம் கர்ப்பமானார்.
இதையடுத்து, அகிலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரிதர்ஷினி வற்புறுத்தி வந்தார். அவரது தொல்லையை தாங்காத அகிலன், கடந்த 3-ந்தேதி பிரியதர்ஷினியை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு ஊர் சுற்றி இருக்கிறார். அவர்கள் அரியலூர் அருகே வந்தபோது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அகிலன் பிரியதர்ஷினி கன்னத்தில் அறைந்தார். உடன் அவர் மயக்கம் அடைந்துவிட்டார்.
ஏரியில் உடலை புதைத்தனர்
அப்போது, அகிலன், தன்னுடன் வந்திருந்த நண்பரான பழைய கருவாச்சியை சேர்ந்த அருண்(21) என்பவருடன் சேர்ந்து பிரியதர்ஷினியை அவரது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளனர். பின்னர் அவர்கள் சாலவனூர் ஏரிப்பகுதிக்கு உடலை எடுத்து சென்றனர்.
அங்கு கக்கனூர் கிராமத்தை சேர்ந்த நண்பரான மணி மகன் சுரேஷ் குமார் என்பவரை மண்வெட்டி எடுத்து வரச்சொல்லி, ஏரியில் பள்ளம் தோண்டி உடலை புதைத்து விட்டு, சென்னைக்கு தப்பிச்சென்று தலைமறைவாகி விட்டனர்.
இந்த நிலையில் தான், ஏரியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடந்த பணியின் போது, தோண்டப்பட்ட பள்ளத்தில் பிரியதர்ஷினியின் உடல் கிடைத்தது தெரியவந்தது.
3 பேர் கைது
இதையடுத்து மாணவியின் காதலன் அகிலன், சுரேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். இதனிடையே போலீசார் தன்னை தேடுவது பற்றி அறிந்த, அருண் கஞ்சனூர் போலீஸ் நிலையத்தில் வந்து சரணடைந்தார். இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.