திருமணம் முடிந்த கையோடு கல்லூரி பருவத்தேர்வை எழுதிய மணப்பெண்
அயோத்தியாப்பட்டணம் அருகே திருமணம் முடிந்த கையோடு மணப்பெண் கல்லூரி பருவத்தேர்வை எழுதினார்.
அயோத்தியாப்பட்டணம்
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தமிழ் இலக்கியா (வயது 23). இவர் வலசையூர் அருகே பருத்திக்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் முதுநிலை படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கும், எம்.பி.ஏ. பட்டதாரியான ஆனந்த் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று காலையில் இவர்களின் திருமணம் நடந்தது. மணநாளான நேற்று தமிழ் இலக்கியாவிற்கு 4-வது பருவத்தேர்வில் (செமஸ்டர்) ஆங்கிலம் மொழி கற்பித்தல் மற்றும் ஐ.சி.டி. பாடத்தேர்வு நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதனால் திருமணம் முடிந்தவுடன், வரவேற்பில் கூட கலந்து கொள்ளாமல், நேற்று காலை 9.30 மணி அளவில், திருமணம் முடிந்த கையோடு, திருமண கோலத்தில் மணப்பெண் தமிழ் இலக்கியா மணக்கோலத்தில் தேர்வு எழுத வந்தார். இதைப்பார்த்த சக மாணவிகள், ஆசிரியர்கள் ஆச்சரியத்துடன் மாணவி தமிழ் இலக்கியாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். திருமணம் முடிந்த கையோடு, மணக்கோலத்தில் மாணவி தேர்வுக்குமுக்கியத்துவம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.