ரூ.250 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுமா?


ரூ.250 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுமா?
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டனூர்- கோட்டையூர் இடையே ரூ.250 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தர்மபுரி

ஏரியூர்:

ஒட்டனூர்- கோட்டையூர் இடையே ரூ.250 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பரிசலில் பயணம்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் சுற்று வட்டார பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவ, மாணவிகள், மேட்டூர், ஈரோடு, பவானி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வேலைக்கும், கல்லூரிகளுக்கும் செல்கிறார்கள். இதேபோல் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு பணிகளுக்காக சென்று வருகிறார்கள்.

இவர்கள் பஸ் மூலம் சேலம் மாவட்ட எல்லையில் உள்ள காவிரி ஆற்றின் மறு கரையை அடைய 70 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டும். அதே நேரத்தில் ஒட்டனூர் பகுதியில் இருந்து பரிசல் மூலம் காவிரி ஆற்றில் சுமார் 2 கி.மீ. பயணம் செய்து கோட்டையூரை அடைய முடியும். அங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு சென்று வர இயலும். இதன் காரணமாக தினமும் ஏரியூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பரிசல் மற்றும் விசைப்படகு மூலமாக ஒட்டனூரில் இருந்து காவிரி ஆற்றின் மறு கரையில் உள்ள கோட்டையூருக்கு சென்று வருகின்றனர்.

மாணவர்கள்- விவசாயிகள் பாதிப்பு

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கும்போது ஒட்டனூர்-கோட்டையூர் இடையே பரிசல் பயணம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. அப்போது பஸ் மற்றும் வாகனங்களில் சுமார் 70 கி.மீ. பயணம் செய்தே காவிரி ஆற்றின் மறுகரையை அடைய முடிகிறது. இதில் ஏற்படும் சிரமங்களால் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.

மேலும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை காவிரி ஆற்றின் மறு கரையில் உள்ள ஊர்களுக்கு கொண்டு செல்ல இயலாத நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஒட்டனூர்-கோட்டையூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்த பகுதி மக்களால் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

ரூ.250 கோடியில் பாலம்

இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒட்டனூர்- கோட்டையூர் இடையே ரூ.250 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் அறிவித்தார். இந்த திட்டத்தை செயல்படுத்த தொடக்க கட்ட பணிகளை மேற்கொள்வது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆனால் பாலம் அமைக்கும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை.

இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணியை விரைவாக தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.


Next Story