மணல் லாரி சென்ற போது பாலம் உடைந்ததால் பரபரப்பு


மணல் லாரி சென்ற போது பாலம் உடைந்ததால் பரபரப்பு
x

திருச்சி அருகே மணல் லாரி சென்றபோது பாலம் உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

திருச்சி அருகே மணல் லாரி சென்றபோது பாலம் உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாலம் உடைந்தது

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் இருந்து அய்யன்வாய்க்கால் பிரிந்து செல்லும் பகுதியில் கடந்த 1964-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்து இருந்தது. இந்த பழமையான பாலத்தை புதுப்பித்து தரவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதற்கிடையே நேற்று காலையில் அய்யன்வாய்க்கால் பாலத்தில் மணல் பாரத்துடன் லாரி கடந்து சென்று கொண்டிருந்தது. லாரியின் முன்பகுதி பாலத்தை கடந்தநிலையில் திடீரென பாலம் உடைந்து இரண்டாக பிளந்தது. இதனால் லாரியின் பின்பகுதி உடைந்த பாலத்தில் சிக்கிக்கொண்டு மீளமுடியாமல் தொங்கியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மீட்பு

இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டுவந்து வேடிக்கை பார்த்தனர். இதைத்தொடர்ந்து பெட்டவாய்த்தலை போலீசார் விரைந்து வந்து லாரியில் உள்ள மணலை மற்றொரு லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அப்பகுதி மக்கள் உதவியுடன் லாரியை கயிறுகட்டி இழுத்து நீண்ட போராட்டத்துக்கு பின்னர் மீட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, அய்யன்வாய்க்கால் பாலத்தை புதுப்பித்து தரக்கோரி நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இனிமேலாவது அந்த பாலத்தை சீரமைக்க வேண்டு்ம் என்றனர். இதுகுறித்து சிறுகமணி பேரூராட்சி தலைவர் சிவகாமசுந்தரி, செயல் அதிகாரி நளாயினி ஆகியோர் கூறும்போது, பாலம் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக குழாய் அமைத்து நடைபாதை அமைத்து தரப்படும். விரைவில் புதிய பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.


Next Story