இறந்து விட்டதாக ஈமச்சடங்கு செய்த நிலையில் உயிருடன் இருப்பதை பார்த்த சகோதரர் கண்ணீர்


இறந்து விட்டதாக ஈமச்சடங்கு செய்த நிலையில் உயிருடன் இருப்பதை பார்த்த சகோதரர் கண்ணீர்
x

ஆந்திராவில் மாயமானவர் இறந்து விட்டதாக கருதிய நிலையில் திருப்பத்தூர் மனநல காப்பகத்தில் குணமடைந்து உயிருடன் இருப்பதை நேரில் பார்த்த சகோதரர் கண்ணீருடன் நன்றி தெரிவித்தார்.

திருப்பத்தூர்

வீடு திரும்பவில்லை

ஆந்திர மாநிலம் இந்துபூர் பகுதியை சேர்ந்தவர் சர்தார் (வயது 37). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே சுற்றித்திரிந்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவர் வீட்டை விட்டு வெளியேறியவர் அதன்பிறகு திரும்பவில்லை. இவரது சகோதரர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. மனநலம் பாதிக்கப்பட்டு தர்மபுரி மாவட்டத்தில் சுற்றிதிரிந்த இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருப்பத்தூர் எஸ்.ஆர்.டி.எஸ். இல்லத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இடைநிலை பராமரிப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சர்தாருக்கு மனநலசிகிச்சையும், மருத்துவ உதவியும் வழங்கப்பட்டு வந்தது. நாளடைவில் படிப்படியாக அவர் குணம் அடைந்து வந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு அங்கு தொழிற்பயிற்சியும் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் தனது முகவரி மற்றும் உடன்பிறந்தவர்கள் விவரங்களை தெரிவித்தார்.

மாவட்ட நிர்வாகம் மூலம் மூலம் அவருடைய சொந்த ஊரான ஆந்திர மாநிலம் இந்துப்பூர் மாவட்டத்தில் உள்ள புலமதி என்ற கிராமத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தி அவரது போட்டோவை காட்டி அவரது வீட்டை கண்டுபிடித்து உறவினர்கள் திருப்பத்தூர் அழைத்து வரப்பட்டனர்.

கண்ணீர்

இங்கு வந்த அவரது சகோதரர் ஜான்பாஷா தனது சகோதரர் சர்தாரை பார்த்து கட்டி தழுவி கதறி அழுதார். அப்போது அவர் கூறுகையில், ''6 வருடமாக அவரை காணவில்லை. இதனால் எங்கள் வீட்டில் அனைவரும் அவர் இறந்து விட்டதாக கருதி அவருக்கு ஈமகாரியம் எல்லாம் செய்து விட்டோம். தற்போது எங்களது சகோதரர் உயிருடன் இருப்பதை பார்த்து எங்கள் சந்தோஷத்திற்கு அளவே இல்லை' 'என கண்ணீர் மல்க கூறி நன்றி தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து நேற்று திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி முன்னிலையில் சர்தார் அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது எஸ்.ஆர்.டி.பி.எஸ்.இயக்குனர் தமிழரசி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story