கோவில்பட்டியில் பயங்கரம்: தொழிலாளியை அடித்துக்கொன்ற தம்பி மது குடிக்க பணம் தரமறுத்த தாயை கொல்ல முயன்றதால் ஆத்திரம்


கோவில்பட்டியில் பயங்கரம்:  தொழிலாளியை அடித்துக்கொன்ற தம்பி  மது குடிக்க பணம் தரமறுத்த தாயை கொல்ல முயன்றதால் ஆத்திரம்
x

கோவில்பட்டியில் மது குடிக்க பணம் தரமறுத்த தாயை கொல்ல முயன்ற தொழிலாளியை தம்பி அடித்துக் கொலை செய்தார்

தூத்துக்குடி

கோவில்பட்டி:

மது குடிக்க பணம் தரமறுத்த தாயை கொல்ல முயன்ற தொழிலாளியை தம்பி அடித்துக் கொலை செய்தார்.

அண்ணன்-தம்பி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் 5-வது தெருவைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டியன் மனைவி ஆறுமுகத்தாய் (வயது 45). இவர்களுக்கு செல்லத்துரை (26), முத்துச்செல்வம் (20) உள்பட 3 மகன்களும், ஒரு மகளும் உண்டு.

கூலித்தொழிலாளியான செல்லத்துரைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

தாயை கொல்ல முயற்சி

நேற்று முன்தினம் இரவு செல்லத்துரை குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது, அவர் தனது தாயாரிடம் மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார்.

பணம் இல்லை என்று ஆறுமுகத்தாய் கூறியதை தொடர்ந்து அவரை செல்லத்துரை தாக்க முயன்றார். அந்த சமயத்தில் வீட்டிற்கு வந்த முத்துச்செல்வம் தடுத்தார்.

எனினும் அவரையும் மீறி ஆறுமுகத்தாய் கழுத்தை நெரித்து செல்லத்துரை கொல்ல முயன்றார்.

அடித்துக்கொலை

இதனால் ஆத்திரமடைந்த முத்துச்செல்வம், வீட்டில் கிடந்த மரக்கட்டையை எடுத்து செல்லத்துரையின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த செல்லத்துரை ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த முத்துச்செல்வம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சங்கர், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், சப்- இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

கொலை செய்யப்பட்ட செல்லத்துரையின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முத்துச்செல்வத்தை பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவில்பட்டியில் தாயை கொல்ல முயன்ற தொழிலாளியை அவரது தம்பியே அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story