தம்பியின் கழுத்தை 'பெல்ட்டால்' இறுக்கி கொன்ற அண்ணன்


தம்பியின் கழுத்தை பெல்ட்டால் இறுக்கி கொன்ற அண்ணன்
x

செல்போனில் விளையாடிய மகளை கண்டித்ததால் ஆத்திரத்தில் தம்பியின் கழுத்தை ‘பெல்ட்டால்’ இறுக்கி கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ராசு (வயது 32). இவருடைய மனைவி கனகா. இவர்களுடைய மகள் மகாலட்சுமி (5). ராசுவின் தம்பி சந்திரன் என்ற விக்கி (19). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

சந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு வழக்கம்போல் மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது தனது அண்ணன் மகள் மகாலட்சுமி செல்போன் விளையாடிக்கொண்டிருந்தாள். இதை கண்ட சந்திரன், சிறுமியை கண்டித்தார். மேலும் சிறுமியிடம் இருந்து செல்போனை பறித்ததுடன், அவளை அடித்ததாகவும் கூறப்படுகிறது.

கழுத்தை இறுக்கி கொலை

இதனால் ஆத்திரமடைந்த ராசு, 'எனது மகளை எப்படி அடிக்கலாம்?' என கேட்டு தம்பி சந்திரனை கண்டித்தார். இதில் அண்ணன்-தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த ராசு, தனது தம்பி சந்திரனை தாக்கி கீழே தள்ளி, அருகில் கிடந்த 'பெல்ட்டால்' அவரது கழுத்தை இறுக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே சந்திரன் பரிதாபமாக இறந்தார்.

கைது

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உதவி கமிஷனர் அகஸ்டின் பால்சுதாகர், நொளம்பூர் ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் கொலையான சந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நொளம்பூர் போலீசார், ராசுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலையான சந்திரன் மீது 4 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story