பேராசிரியையை தாக்கி ரோட்டில் தர தரவென இழுத்துச்சென்ற கொடூர காட்சி
திருச்சி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியையை தாக்கி ஸ்கூட்டர், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற கொடூர கொள்ளையன் தப்பி செல்ல முயன்றபோது, அவனது கால்முறிந்தது. இதனிடையே அவன் பேராசிரியையை தாக்கி ரோட்டில் தர தரவென இழுத்துச்சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியையை தாக்கி ஸ்கூட்டர், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற கொடூர கொள்ளையன் தப்பி செல்ல முயன்றபோது, அவனது கால்முறிந்தது. இதனிடையே அவன் பேராசிரியையை தாக்கி ரோட்டில் தர தரவென இழுத்துச்சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியை
திருச்சி வ.உ.சி. சாலை கேலக்சி டவர் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன். இவருடைய மனைவி சீதாலட்சுமி (வயது 53). பேராசிரியையான இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.சி. துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.
வழக்கமாக மாலை நேரத்தில் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அங்குள்ள மைதானத்தில் நடைப்பயிற்சி செல்வாா். பின்னர் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவார்.
ஸ்கூட்டர், செல்போன் கொள்ளை
அதுபோல் கடந்த 12-ந்தேதி மாலை அவர் நடைப்பயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக ஸ்கூட்டரை எடுக்க சென்றார். அப்போது, அங்கு நின்ற ஒரு வாலிபர் தான் வைத்திருந்த மரக்கட்டையால் பேராசிரியையின் தலையில் தாக்கினார். இதில் நிலைகுலைந்து அவர் மயங்கி கீழே விழுந்தார்.
உடனே, அந்த வாலிபர் பேராசிரியையின் கால்களை பிடித்து தர, தரவென ரோட்டில் இழுத்துச்சென்று அருகில் இருந்த சுவரில் சாய்த்து படுக்க வைத்துவிட்டு ஸ்கூட்டர் மற்றும் செல்போனை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றான். மயக்கம் தெளிந்து எழுந்த பேராசிரியை சீதாலட்சுமி, இதுகுறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் வலைவீச்சு
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பேராசிரியையை தாக்கி ஸ்கூட்டர், செல்போனை பறித்துச்சென்றவர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பழமனேரியை சேர்ந்த செந்தில்குமார் (32) என்பது தெரியவந்தது.
மேலும், குடிபோதை மற்றும் கஞ்சாவுக்கு அடிமையான செந்தில்குமார், தற்போது திருச்சி காந்திமார்க்கெட் தாராநல்லூர் கீரைக்கடை பஜார் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தலைமறைவாக உள்ள செந்தில்குமாரை போலீசார் தேடி வந்தனர்.
கால் உடைந்தது
இந்தநிலையில், செந்தில்குமார் தாராநல்லூர் பகுதியில் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று செந்தில்குமாரை பிடிக்க முயன்றனர். போலீசாரை பார்த்ததும், பேராசிரியையிடம் கொள்ளையடித்த ஸ்கூட்டரில் அதிவேகமாக சென்றார். அப்போது, சாலையின் மையத்தடுப்பில் மோதி ஸ்கூட்டருடன் அவர் கீழே விழுந்தார்.
இதில் அவருடைய இடதுகால் உடைந்தது. இதைத்தொடர்ந்து அவரை மீட்ட போலீசார் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் செந்தில்குமாரிடம் இருந்து சீதாலட்சுமியின் ஸ்கூட்டர், செல்போனை போலீசார் மீட்டனர்.
வைரல் ஆன வீடியோ
இதற்கிடையே தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட சீதாலட்சுமியை செந்தில்குமார் தாக்கி, அவரை தர, தரவென ரோட்டில் இழுத்துச்செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.