கால்வாயில் தவறி விழுந்த எருமை மாடு
குளச்சலில் கால்வாயில் தவறி விழுந்த எருமை மாடு
குளச்சல்,
குளச்சல் களிமாரை சேர்ந்தவர் சமீர் (வயது27). இவர் தனது வீட்டில் 4 எருமை மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் வழக்கம் போல் எருமை மாடுகளை களிமார் பாம்பூரி கால்வாய் பகுதியில் மேய்ச்சலுக்காக கட்டியிருந்தார். மாலையில் மேய்ச்சல் முடிந்து மாடுகளை அவிழ்த்து கொண்டு வீட்டிற்கு ஓட்டி வந்து கொண்டிருந்தார். களிமார் பாலத்தில் வந்த போது அந்த பகுதியில் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அப்போது வாகனத்தில் சென்ற ஒருவர் ஹாரன் அடித்தார். இந்த சத்தத்தில் ஒரு எருமை மாடு மிரண்டு ஓடி பாலத்தில் இருந்து தவறி 20 அடி ஆழமுள்ள பாம்பூரி கால்வாயில் விழுந்தது. மழை காரணமாக கால்வாயில் நீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டது. இதனால் எருமை மாடு தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதுகுறித்து சமீர் குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் குணசேகர் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி சுமார் 1 மணிநேரம் போராடி எருமை மாட்டை உயிருடன் மீட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.