கட்டிட மேஸ்திரி அடித்து கொலை


கட்டிட மேஸ்திரி அடித்து கொலை
x
தினத்தந்தி 17 Aug 2023 4:49 PM IST (Updated: 17 Aug 2023 6:54 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே தாம்பத்ய உறவுக்கு மனைவி மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் கட்டிட மேஸ்திரி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்

கட்டிட மேஸ்திரி

திருப்பத்தூரை அடுத்த சு.பள்ளிப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்குரும்பர் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 44), பெங்களூருவில் கட்டிட மேஸ்திரியாக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி சிவகாமி (34). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனது குடும்பத்தினரை பார்க்க ஜெயபால் பெங்களூருவில் இருந்து ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது ஜெயபால் மது குடித்து இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் தனது மனைவியை தாம்பத்ய உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு அவருடைய மனைவி, மகன், மகள் தூங்கியபிறகு வருவதாக கூறி மறுத்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து ஜெயபால், மனைவியை அழைக்க சென்றபோது அங்கு அவரது மகன் படுத்திருந்ததாகவும், இதனால் சிவகாமியை வெளியே வருமாறும் கூறியிருக்கிறார்.

அடித்து கொலை

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஜெயபால், மனைவியை அடித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிவகாமி, ஜெயபாலை தாக்கியதாக கூறப்படுகிறது. அவரது மகனும், ஜெயபாலை அடித்ததாக தெரிகிறது.

பின்னர் ஜெயபால் மாடியில் உள்ள அறைக்கு சென்று தூங்கி இருக்கிறார். காலையில் அறைக்கு சென்று பார்த்தபோது ஜெயபால் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

உடனடியாக இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி, மகன் கைது

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து சிவகாமி, அவரது மகனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஜெயபாலின் மகனுக்கு 17 வயது ஆவதால் அவரை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். கணவனை, மனைவி அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story