மஞ்சுவிரட்டு காளை இறந்தது
இறந்த காளைக்கு அமைச்சர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அடுத்த தென்மாபட்டு பகுதியில் முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான மஞ்சுவிரட்டு காளை மிகவும் புகழ்பெற்றது. இந்த காளை மஞ்சுவிரட்டு பொட்டல்களில் திட்டமிட்டு விளையாடுவதால் இதற்கு ஸ்கெட்ச் எனப் பெயரிட்டு மக்கள் அழைத்து வந்தனர். சிராவயல், நெடுமறம், புதூர், கண்டிப்பட்டி, அரளிப்பாறை என பல்வேறு மஞ்சுவிரட்டு மைதானங்களில் விளையாடி பெயர் பெற்றதுடன், பல பரிசுகளையும் இந்த காளை வென்றுள்ளது.இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக இந்த காளை இறந்தது. இதுகுறித்து அறிந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அங்கு சென்று காளைக்கு மாலை மற்றும் வேட்டி அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பேரூராட்சி துணை தலைவர் கான்முகமது, ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன், தி.மு.க. இளைஞரணி தமிழ்நம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தென்மாபட்டு கிராம மக்கள் குலவையிட்டும், பாட்டு பாடியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் முக்கிய வீதிகள் வழியாக மாட்டின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சம்பப்பட்டி அருகே ஒரு தோப்பில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.