மாடுபிடி வீரர்களை பந்தாடிய காளைகள்


மாடுபிடி வீரர்களை பந்தாடிய காளைகள்
x
தினத்தந்தி 22 Feb 2023 12:30 AM IST (Updated: 22 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தாடிக்கொம்பு அருகே மறவபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடின. காளைகள் முட்டியதில் 34 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

ஜல்லிக்கட்டு

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே மறவபட்டியில் புனித பெரிய அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி ஆன்லைன் வழியாக பதிவு செய்த 433 காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டன. இந்த காளைகளுக்கு திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் திருவள்ளுவன் தலைமையிலான கால்நடை மருத்துவக்குழு பரிசோதனை செய்து அனுமதி வழங்கினர்.

இதேபோல் மாடுபிடி வீரர்கள் 94 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சீனிவாசன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து தகுதியான 88 மாடுபிடி வீரர்களை மட்டும் களத்தில் இறங்க அனுமதித்தனர். இவர்கள் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு, குழுவுக்கு 16 நபர்கள் வீதம் களத்தில் இறங்கினர்.

போட்டிப்போட்ட வீரர்கள்

இந்தநிலையில் காலை 7 மணி அளவில் ஊர் அழைப்பு மற்றும் பரிசுப்பொருட்கள் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காலை 7.30 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதில் மாநில விலங்குகள் நலவாரிய தலைவர் மிட்டல் கலந்துகொண்டு, கொடியசைத்து ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார், திண்டுக்கல் மேற்கு தாசில்தார் ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலையில் முதலில் உள்ளூர் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்க முயன்றனர்.

பின்னர் மதுரை, அலங்காநல்லூர், பாலமேடு, புதுக்கோட்டை, சிவகங்கை, மணப்பாறை, விராலிமலை, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், திண்டுக்கல் மற்றும் நத்தம் சுற்றுவட்டார கிராமங்களான புகையிலைப்பட்டி, மைக்கேல்பாளையம், தவசிமடை, வெள்ளோடு, கொசவபட்டி, பஞ்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அழைத்து வரப்பட்ட காளைகள் டோக்கன்கள் அடிப்படையில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

பந்தாடிய காளைகள்

வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். அப்போது சில காளைகள் அவிழ்த்து விட்டவுடன் வாடிவாசலுக்குள்ளே நின்று கொண்டு கொம்புகளை அங்குமிங்கும் ஆட்டி மாடுபிடி வீரர்களை பயமுறுத்தியது. சில காளைகள் கோப பார்வை கொண்டு செருமியபடி வீரர்களை அச்சுறுத்தியது.

மேலும் சில காளைகள், தங்களை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களை முட்டி தூக்கிவீசி பந்தாடியது. வாடிவாசலை விட்டு வெளியே வந்தவுடன் சில காளைகள் மாடுபிடி வீரர்களை நாலாபுறமும் சிதறி ஓட செய்தது. அதிலும் ஒரு காளையை 4 மாடுபிடி வீரர்கள் சூழ்ந்து அடக்க முயன்றனர். அப்போது அந்த காளை மாடுபிடி வீரர்களை முட்டி தூக்கிவீசி பந்தாடியது. ஒரு வீரரை தலைகீழாக தொங்கவிட்டது. மற்றொரு காளை, சண்டைனா சட்டை கிழியதான் செய்யும் என்பது போன்று தன்னை அடக்க வந்த வீரரின் டி-சர்ட்டை கொம்பால் குத்தி கிழித்தெறிந்தது.

பரிசுகள்

வாடிவாசல் வழியாக பாய முயன்ற ஒரு காளையை 10-க்கும் மேற்பட்ட காளையர்கள் மறித்து அடக்க முயன்றனர். அப்போது அந்த காளை 2 கால்களை கீழே ஊன்றியபடி, 2 கால்களை மேலே தூக்கியபடி சீறிப்பாய்ந்த காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

அதேபோல் திமிலுடன் திமிறிய காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். அவர்களுக்கு பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

இவ்வாறு வீரர்களை விரட்டியதுடன், அவர்களிடம் சிக்காமல் தப்பிய காளைகளுக்கும், வீரத்துடன் போராடி காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் இரும்பு கட்டில், நாற்காலி, அண்டா உள்ளிட்ட பாத்திரங்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. மேலும் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி சார்பில், ஜல்லிக்கட்டில் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

34 பேர் காயம்

இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 19 பேர், காளைகளின் உரிமையாளர்கள் 9 பேர், பார்வையாளர்கள் 6 பேர் என 34 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு, ஏற்கனவே அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவமனையில் தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. காயமடைந்தவர்களில் 6 பேர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த சிலர், பாதுகாப்பு தடுப்புகள் மீது ஏறி ஆபத்தான முறையில் ஜல்லிக்கட்டை பார்த்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தடுப்புகள் மீது ஏறி நின்றவர்களை விரட்டியடித்தனர். இதனால் ஜல்லிக்கட்டு களத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை ஊர் பெரியதனக்காரர்கள் தலைமையில் புனித செபஸ்தியார் ஜல்லிக்கட்டு குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story