தாளவாடியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்காமல் நல்ல ரோட்டில் புதிதாக தார் ரோடு போடும் பணி


தாளவாடியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்காமல் நல்ல ரோட்டில் புதிதாக தார் ரோடு போடும் பணி நடப்பதாக வாகன ஓட்டிகள் குற்றசாட்டுகின்றனர்.

ஈரோடு

தாளவாடி

தாளவாடியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்காமல் நல்ல ரோட்டில் புதிதாக தார் ரோடு போடும் பணி நடப்பதாக வாகன ஓட்டிகள் குற்றசாட்டுகின்றனர்.

குண்டும், குழியுமான சாலை

தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எந்தவித அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும் தாளவாடிதான் வரவேண்டும். இதில் தாளவாடியில் இருந்து ஓசூர் செல்லும் சாலை முக்கிய சாலை ஆகும். இந்த சாலையில் தினந்தோறும் பள்ளி வாகனங்கள், விவசாயிகள் காய்கறி ஏற்றி செல்லும் வாகனங்கள், பஸ்கள் என 1,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

தாளவாடி பஸ் நிலையம் அருகே இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. எனவே குண்டும், குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க கடந்த 2 ஆண்டுகளாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்து உள்ளனர்.

புதிய தார்சாலை

இந்த நிலையில் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுபற்றி வாகன ஓட்டிகள் கூறுகையில், 'தாளவாடியில் இருந்து ஓசூர் வழியாக பாரதிபுரம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. புதிதாக தார் சாலை அமைக்க பல்வேறு முறை மனு அளித்து உள்ளோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே தற்போது நல்ல நிலையில் உள்ள தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் மீண்டும் புதிய தார் ரோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பழுதடைந்த சாலையை சீரமைக்காமல் நல்ல நிலையில் உள்ள சாலையில் புதிதாக தார் ரோடு போடப்படுகிறது,' என குற்றம்சாட்டினர்.


Next Story