பஸ் மோதி சிக்னல் கம்பம் சாய்ந்தது
வேலூரில் பஸ் மோதி சிக்னல் கம்பம் சாய்ந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வேலூர், நவ.12-
வேலூரில் பஸ் மோதி சிக்னல் கம்பம் சாய்ந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தனியார் பஸ்
ஆற்காட்டில் இருந்து நேற்று காலை தனியார் டவுன் பஸ் வேலூர் பழைய பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆற்காடு ரோட்டில் சி.எம்.சி. ஆஸ்பத்திரி முன்பு சென்றபோது பஸ் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
காமராஜர் சிலை அருகே உள்ள சிக்னல் கம்பத்தில் பஸ் பயங்கரமாக மோதியது. இதில் சிக்னல் கம்பம் ரோட்டில் சாய்ந்து விழுந்தது. அதனுடன் இணைக்கப்பட்டிருந்த கேபிள் மற்றும் மின் வயர்களும் ரோட்டில் அறுந்து விழுந்தன.
இதனால் ஆற்காடு ரோட்டில் போக்குவரத்து தடைப்பட்டது. அதிகாலையில் விபத்து நடந்ததால் வாகனங்கள் காட்பாடி ரோட்டில் திருப்பி விடப்பட்டன.
பின்னர போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் மின்கம்பம் மற்றும் ரோட்டில் இருந்து வயர்கள் அகற்றப்பட்டன.
தடுப்புகள் வைக்க வேண்டும்
எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் சி.எம்.சி. சிக்னலில் விபத்து நடந்த நேரத்தில் வாகனங்கள் வரத்தும், மக்கள் நடமாட்டமும் குறைவாக இருந்தது. அதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஒருவேளை மற்ற நேரங்களில் விபத்து ஏற்பட்டிருந்தால் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும்.
ஆற்காடு சாலையில் வாகனங்கள் சீராக செல்லும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் அந்த தடுப்புகள் அகற்றப்பட்டதால் விபத்துகள் ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே ஆற்காடு சாலையில் மேலும் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க உடனடியாக சாலை நடுவில் தடுப்புகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.