மாமியார் வீட்டிற்கு தீ வைத்துவிட்டு முதல் மனைவியிடம் போனில் கூறிய வியாபாரி
மாமியார் வீட்டிற்கு தீவைத்த வியாபாரி அது குறித்த தகவலை போன் செய்து முதல்மனைவிக்கு தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடி
மாமியார் வீட்டிற்கு தீவைத்த வியாபாரி அது குறித்த தகவலை போன் செய்து முதல்மனைவிக்கு தெரிவித்துள்ளார்.
இருவருமே 2-வது திருமணம்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சார்ந்த ஜெய்தூண். இவரது மகள் நிஷாவுக்கும் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ரமேஷ், கள்ளக்குறிச்சியில் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். பின்னர், இருவருமே வேறு நபர்களை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். நிஷா மற்றும் அவரது 3 பிள்ளைகள், இரண்டாவது கணவர் ரவிக்குமார், முதல் கணவரின் தாய் ஆகியோர் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நிஷாவின் முதல் கணவர் ரமேஷ் இரண்டாவது திருமணம் செய்த சில ஆண்டுகளில் இரண்டாவது மனைவியும் அவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் ரமேஷ் முதல் மனைவி நிஷாவுடன் கடந்த ஒரு வாரமாக தொலைபேசியில் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
தீவைப்பு
நேற்று முன்தினம் இரவு யாரும் இல்லாத நேரத்தில் நிஷாவின் தாய் வீட்டிற்கு ரமேஷ் வந்து உள்ளார். அங்கு நிஷா இல்லாததால் ஆத்திரம் அடைந்த ரமேஷ், திடீரென அந்த வீட்டுக்கு தீ வைத்துவிட்டு, பின்னர் நிஷாவிற்கு தொலைபேசி மூலம் அது குறித்து தெரிவித்துள்ளார்.
உடனடியாக நிஷா தனது தாய் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின், நகை, ரொக்கம், வங்கி பாஸ் புத்தகம், பாஸ்போட், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஆகிய அனைத்தும் எரிந்து சாம்பலாகி இருந்தது.
இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஜெய்தூண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.