ஆழித்தேருக்கு பிரித்து மூடும் வகையில் கூண்டு அமைக்க வேண்டும்


ஆழித்தேருக்கு பிரித்து மூடும் வகையில் கூண்டு அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Sept 2023 12:15 AM IST (Updated: 12 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டுக்கு 5 மாதங்கள் கூட கண்ணாடி கூண்டை பயன்படுத்த முடியவில்லை என்பதால் திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு எளிதில் பிரித்து மூடும் வகையில் கூண்டு அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

ஆண்டுக்கு 5 மாதங்கள் கூட கண்ணாடி கூண்டை பயன்படுத்த முடியவில்லை என்பதால் திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு எளிதில் பிரித்து மூடும் வகையில் கூண்டு அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

கண்ணாடி கூண்டு அமைப்பு

ஆழித்தேரை இரும்பு தகட்டினால் ஆன மேற்கூரை கொண்டு தேரை மூடுவது வழக்கம். இதனால் பிரமாண்டமான ஆழித்தேரின் அழகிய தோற்றம், மர சிற்பங்கள் என அனைத்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாமல் இருந்து வந்தது.

ஆழித்தேரை எந்த நேரத்திலும் அனைவரும் காணும் வகையில் கண்ணாடி கூண்டு அமைத்திட இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டது. அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு ஆழித்தேருக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது.

தற்காலிக மேற்கூரை அமைக்கப்படும்

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதிலும் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேர் வடம் பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பிப்ரவரி மாதம் தேரின் கண்ணாடி கூண்டு கிரேன் உதவியுடன் பிரிக்கப்பட்டது. தேரோட்டம் நிறைவு பெற்ற நிலையில் ஆடிப்பூர அம்பாள் தேரோட்டத்தை கணக்கில் கொண்டு ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்படாமல் தற்காலிக இரும்பு தகடுகளால் மேற்கூரை அமைக்கப்படும்.

ஆடிப்பூர விழா அம்பாள் தேரோட்டத்தின் போது, இந்த தேர் ஆழித்தேரை கடந்து செல்ல வேண்டும். இதனால் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டால் அம்பாள் தேர் வடம் பிடித்து செல்லும்போது இடையூறாக அமையும். மேலும் கண்ணாடி கூண்டு என்பதால் ஏதேனும் லேசாக உரசினால், கண்ணாடி சேதமடையும் நிலை உள்ளது. இதனால் அம்பாள் தேரோட்டத்திற்கு வசதியாக ஆழித்தேருக்கு தற்காலிக இரும்பு தகடுகளால் மூடப்பட்டு வருகிறது.

பக்தர்கள் வேதனை

இந்த ஆண்டு ஆழித்தேர் தேரோட்டம் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி நடைபெற்றது. இதையடுத்து ஆழித்தேருக்கு இரும்பு தகட்டினால் தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டது. கடந்த ஜூலை 21-ந் தேதி அம்பாள் தேரோட்டம் நடந்தது.

இதையடுத்து கண்ணாடி கூண்டு அமைக்கப்படாமல் தற்காலிக இரும்பு தகட்டினால் மேற்கூரை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆழித்தேர் நான்கு புறங்களிலும் திறந்த நிலையில் இருந்து வருகிறது. தற்போது மழை அடிக்கடி பெய்து வரும் நிலையில் முழுமையாக மூடப்படாத ஆழித்தேர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.

பிரித்து கையாளும் வகையில் கூண்டு

ஆழித்தேர் கண்ணாடி கூண்டு கிரேன் உதவியுடன் அமைக்க வேண்டும். மேலும் கண்ணாடி பொருத்துவது என பல்வேறு சிரமங்கள் உள்ளன. இந்த கண்ணாடியும் கால போக்கில் மங்கலாகியும், பல கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது. குறிப்பாக கண்ணாடி கூண்டு என்பது ஆண்டிற்கு 5 மாதங்கள் மட்டுமே மூடப்படுகிறது. எனவே கண்ணாடி கூண்டிற்கு மாற்றாக எளிதில் பிரித்து கையாளும் வகையில் கூண்டு அமைத்தால் மட்டுமே ஆழித்தேர் முழுமையாக பாதுகாக்கப்படுவதுடன், பயனும் அளிக்கும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருவாரூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் கூறுகையில், ரூ.40 லட்சம் மதிப்பில் அழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் தேரோட்டத்திற்கு கண்ணாடி கூண்டு பிரிக்கப்பட்ட நிலையில், தேரோட்டத்திற்கு பிறகு அம்பாள் தேரோட்டத்திற்காக ஆடி மாதம் முடியும் வரை கண்ணாடி கூண்டு அமைக்கப்படாமல் தற்காலிக மேற்கூரை மட்டுமே அமைக்கப்படுகிறது.

உரிய நடவடிக்கை

இதனால் பிப்ரவரி மாதம் பிரிக்கப்படும் ஆழித்தேர் ஆகஸ்டு மாதம் இறுதியில் கண்ணாடி கூண்டு அமைக்கப்படுகிறது. இதனால் ஆண்டிற்கு 5 மாதங்கள் கூட முழுமையாக கண்ணாடி கூண்டு பயன்படுத்தப்படுவதில்லை. இந்த கண்ணாடி கூண்டும் சரியான முறையில் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்படாததால், இந்த கூண்டினை அமைப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. கண்ணாடி கூண்டு பிரிப்பதற்கும், மூடுவதற்கும் கிரேன் உதவியுடன் அதிக செலவிட வேண்டிய நிலைதான் நிலவி வருகிறது.

பிரதான சாலையில் ஆழித்தேர் உள்ளதாலும், கண்ணாடி கூண்டிற்கான வடிவமைப்பு சரிவர திட்டமிடப்படவில்லை. இதனால் கண்ணாடி கூண்டு ஆண்டு முழுவதும் பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. எனவே வரலாற்று சிறப்புமிக்க தேரை பாதுகாத்திட எளிதில் பிரித்து மீண்டும் மூடுவதற்கு வசதியான கூண்டு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேர் பாதுகாக்கப்படும் என்றார்.


Next Story