குர்பானிக்காக கொண்டுவரப்பட்ட ஒட்டகம் திருப்பி அனுப்பப்பட்டது
பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுப்பதற்காக வாணியம்பாடிக்கு கொண்டு வரப்பட்ட ஒட்டகம் மீண்டும் பெங்களுருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
பக்ரீத் பண்டிகை
பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பக்ரீத் பண்டிகைக்கு ஆடு, மாடு, மற்றும் ஒட்டகங்களை பலியிட்டு குர்பானி கொடுப்பது வழக்கம். சில ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒட்டகங்கள் பலியிட்டு குர்பானி கொடுப்பதை இஸ்லாமியர்கள் தவிர்த்து வந்தனர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜிநகரை அடுத்த மருத்துவர் காலனி பகுதியில் ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக ஒட்டகம் ஒன்றை வாங்கி வந்துள்ளதாக போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மருத்துவர் காலனி பகுதிக்கு சென்று அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ஒட்டகத்தை கைப்பற்றி அதனை வாங்கி வந்தவர்களிடம் விசாரணை செய்தனர்.
திருப்பி அனுப்பப்பட்டது
அவர்களிடம் ஒட்டகம் குர்பானி கொடுக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.
இதனை தொடர்ந்து ஒட்டகத்தை அவர்கள் வாங்கி வந்த இடமான பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் திருப்பி அனுப்பி வைத்தனர்.