இந்துக்களின் உரிமையை மீட்க பிரசார பயணம் 28-ந் தேதி தொடங்குகிறது; இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி
இந்துக்களின் உரிமையை மீட்க பிரசார பயணம் 28-ந் தேதி தொடங்குகிறது என்று இந்து முன்னணி மாநில தலைவர் கூறினார்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருச்சியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-
இந்துக்களின் உரிமையை மீட்பதற்கான பிரசார பயணம் திருச்செந்தூரில் வருகிற 28-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 31-ந் தேதி சென்னையில் நிறைவடைகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. பள்ளி பாடப்புத்தகங்களில் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்துவதை கண்டிக்கிறோம். பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருளை புழக்கத்தில் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து தெய்வங்களை இழிவுபடுத்தி பேசுவது அதிகரித்துள்ள நிலையில், அதற்கு மாற்றாக கருத்து தெரிவிப்பவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து மதமாற்ற நிகழ்வுகளும், சட்டவிரோத வழிபாட்டு தலங்களும் அதிகரித்துள்ளன. சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை தொடங்குவதற்கு பல்வேறு வகையான சலுகைகள் அளிக்கப்படுகிறது. அதேசமயம் இந்துக்கள் கல்வி நிலையங்கள் தொடங்குவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் இந்து மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லவர். ஆனால் அவரை இயக்கக்கூடிய சக்திகள் தவறானது. இவ்வாறு அவர் கூறினார்.