வெள்ளாளபுரம் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்: கால்வாய் உடைந்து விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது


வெள்ளாளபுரம் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்:  கால்வாய் உடைந்து விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது
x

வெள்ளாளபுரம் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில், அதன் கால்வாய் உடைந்து விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் பயிர்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

சேலம்

எடப்பாடி,

வெள்ளாளபுரம் ஏரி

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடர்ச்சியாக கனமழை கொட்டி தீர்த்தது. சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பெய்த கன மழையால் அங்கிருந்து உருவாகி வரும் சரபங்கா நதியில் தொடர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தற்போது வரை வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது.

இதனால் சரபங்கா நதியின் வடி நிலப்பகுதியில் கொங்கணாபுரம் அருகே உள்ள வெள்ளாளபுரம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியது. ஏரியில் இருந்து பிரதான கால்வாய்கள் வழியாக அருகில் உள்ள தாதாபுரம் ஈச்சனேரி, ஆசன்குட்டை ஏரிகளுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு, சென்று கொண்டிருந்தது.

கால்வாயில் உடைப்பு

இந்தநிலையில் நேற்று வெள்ளாளபுரம் ஏரியின் கால்வாயில் கோணசமுத்திரம் அருகே திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் கால்வாயில் இருந்து வெளியேறிய தண்ணீர், அருகில் உள்ள விளை நிலங்களில் புகுந்தது. விளை நிலங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்பதால், அதில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி, சோளம் உள்ளிட்ட பயிர்கள் அழுகி சேதமடையும் நிலை உருவாகி உள்ளது.

இதனிடையே கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இருந்தபோதிலும், தொடர்ந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் மற்ற ஏரிகள் முழுமையாக நிரம்பாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story