கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
ஓசூர் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் கீழே குதித்து வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஓசூர்
ஓசூர் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் கீழே குதித்து வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
காரில் தீ
கர்நாடக மாநிலம் பெங்களூரு யஷ்வந்த்புரா பகுதியை சேர்ந்தவர் கிரீஷ் (வயது27). இவர், ஓசூர் பகுதியை சேர்ந்த நண்பர் மஞ்சுநாத் என்பவரின் காரில் நேற்று ஓசூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார். தமிழக எல்லைக்கு மிக அருகில் உள்ள அத்திப்பள்ளி மேம்பாலத்தில் வந்தபோது திடீரென கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கிரீஷ், காரை மேம்பாலத்தில் நிறுத்தி கீழே குதித்தார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் மளமளவென தீப்பிடித்து பரவியது. இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் தீயில் எரிந்து சேதமடைந்தது. இந்த தீவிபத்து குறித்து கிரீஷ், அத்திப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் காரில் இருந்து குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் காரணமாக ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மேம்பாலத்தில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.