கல்லட்டி மலைப்பாதையில் கார் தீப்பிடித்து எரிந்தது
கல்லட்டி மலைப்பாதையில் கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்.
ஊட்டி,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சரவணன் என்பவர் ஐ.டி. ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது நண்பர்களான வினித், சுரேஷ், சரண்பாபு, பிரசாந்த் ஆகிய 4 பேருடன் வாடகை காரில் நேற்று முன்தினம் இரவு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்து கொண்டிருந்தார். கல்லட்டி மலைப்பாதையில் 4-வது கொண்டை ஊசி வளைவில் வந்த போது, காரின் முன்பக்கத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. புகை வருவதை பார்த்ததும் காாில் இருந்த 5 பேரும், காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினர். காரில் தீ மளமள என பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக மாறியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ஸ்ரீதர், அன்பகன் ஆகியோர் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் கார் சேதமடைந்தது. சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.