டயர் வெடித்து 25 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
நாட்டறம்பள்ளி அருகே டயர் வெடித்ததில் 25 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து மூன்று பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
நாட்டறம்பள்ளி அருகே டயர் வெடித்ததில் 25 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து மூன்று பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
கார் கவிழ்ந்து விபத்து
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணகிரியை அடுத்த ராயக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் நந்தகுமார் (வயது 24), போஸ் (22), மற்றும் அதே பகுதியை சேர்ந்த இவர்களது நண்பர் தினேஷ் (20). இவர்கள் மூன்று பேரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆயுத பூஜை பண்டிகை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஒரே காரில் சென்னையிலிருந்து தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். காரை நந்தகுமார் ஓட்டிச் சென்றார்.
நேற்று காலை 9 மணியளவில் நாட்டறம்பள்ளி பகுதியில் புதுப்பேட்டை பைபாஸ் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது காரின் இடது பக்க டயர் வெடித்ததில் கார் நிலை தடுமாறி சாலையில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி சாலையோரத்தில் உள்ள சுமார் 25 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.
3 பேர் காயம்
இதில் காரில் பயணம் செய்த 3 பேரும் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார்கள். அப்போது அந்த வழியாக சென்ற நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.