திராவிடர் கழகத்தினர் மீது வழக்கு
அவதூறு கோஷம் எழுப்பிய திராவிடர் கழகத்தினர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
மதுரை,
மதுரையில் இடதுசாரிகள் மற்றும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 29-ந்தேதி செஞ்சட்டை பேரணி நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தை, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.இந்த பேரணியில் பங்கேற்றவர்கள் இந்து மத கடவுள்கள் பற்றி அவதூறு கோஷங்கள் எழுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இதையடுத்து இந்து மத கடவுள்களை அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். மேலும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.அதன்பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து செஞ்சட்டை பேரணியில் பங்கேற்ற திராவிடர் கழகத்தினர் மீது மதுரை எஸ்.எஸ். காலனி போலீசார் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.