எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும்
எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும்
எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என காமராஜ் எம்.எல்.ஏ. கூறினார்.
ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்து திருவாரூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இது ஜனநாயக படுகொலையாகும். எதிர்க்கட்சிகளின் குரல்வலையை நெரிக்க தமிழக அரசு முயற்சிக்கிறது. மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒரு நபர் தேவையற்ற கோஷம் போடுகிறார்.
இந்த நேரத்தில் ஒரு வார்த்தை கூட பேசாமல் எதிர்ப்பு தெரிவிக்காமல் நாகரிகமாக நடந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு போடுவது கண்டிக்கத்தக்கது.
அனைத்து திட்டங்களும் தேங்கி கிடக்கிறது
சிவகங்கையில் நடந்த கூட்டத்தை பார்த்துவிட்டு மனம் பொறுக்காமல் இந்த வழக்குகளை போட்டுள்ளனர். உடனடியாக இந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும். அறுவடை செய்யப்பட்ட நெல்மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கி கிடக்கிறது. நெல் மூட்டைகள் மட்டுமல்ல, அரசின் அனைத்து திட்டங்களும் தேங்கி கிடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் சிவராஜமாணிக்கம், மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொன்.வாசுகிராம், பாலாஜி, கலியபெருமாள், ஒன்றியச்செயலாளர்கள் பாப்பா சுப்பிரமணியன், தமிழ்ச்செல்வம், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.