காவிரி பாலம் செஸ் போர்டு போல மாற்றி அமைப்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் மயிலாடுதுறையில் உள்ள காவிரி ஆற்று பாலம் செஸ் போர்டு போல மாற்றி அமைக்கப்பட்டது.
பாலம்
அந்தவகையில் சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள நேப்பியர் பாலம் செஸ் போர்டு கட்டங்களை போன்று கருப்பு வெள்ளை நிறத்தில் வர்ணம் தீட்டப்பட்டது. அதேபோல மயிலாடுதுறையில் செஸ் ஆர்வலர்களின் முயற்சியால் அரசு ஆஸ்பத்திரி சாலையில் உள்ள காவிரி ஆற்றுப்பாலம், சென்னை நேப்பியர் பாலம் போல செஸ் போர்டு போன்று வர்ணம் தீட்டப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை முன்னாள் எம்.எல்.ஏ., ஜெக.வீரபாண்டியன் தலைமையில், சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம், ஓவியர் ரஜினிபாஸ்கர், மாவட்ட செஸ் கழகச் செயலாளர் வெற்றிவேந்தன் ஆகியோர் இதற்கான விழிப்புணர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பார்த்து வியப்படைந்து வருகின்றனர்.
பஸ்களில் ஸ்டிக்கர்
இதேபோல மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் செஸ் ஒலிம்பியாட் குறித்து பஸ் பயணிகள் அறிந்து கொள்ளும் பொருட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் கலந்து கொண்டு ஒலிம்பியாட் ஸ்டிக்கர்களை பஸ்களின் கண்ணாடிகளில் ஒட்டினார். இதில் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராமமூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார் மற்றும் அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள், வட்டார மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.