வடமாநில வாலிபருக்கு உடந்தையாக இருந்த செல்போன் கடை உரிமையாளர் கைது
பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து, மிரட்டி பணம் பறித்த வடமாநில வாலிபருக்கு உடந்தையாக இருந்ததாக வடமதுரை வியாபாரி கைது செய்யப்பட்டார். அவரை, கொல்கத்தாவுக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
வடமாநில வாலிபர்
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சத்யாநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 35). இவர், வடமதுரை 3 சாலை சந்திப்பு அருகே செல்போன் கடை வைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜேந்திரனிடம் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், சிம் கார்டு ஒன்ைற வாங்கினார்.
அப்போது அந்த சிம்கார்டை ராஜேந்திரன் பெயரிலேயே அந்த வாலிபர் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த வடமாநில வாலிபர், சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி, அவர்களது புகைப்படம் மற்றும் தொடர்பு எண்களை பெற்றார்.
பெண்ணிடம் பணம் பறிப்பு
பின்னர் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து, அவற்றை அவர்களுக்கே அனுப்பி பணம் பறித்து வந்தார். அந்த வகையில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த 30 வயது பெண் ஒருவரிடமும், அந்த வடமாநில வாலிபர் மிரட்டி ரூ.1½ லட்சம் வாங்கினார். மேலும் ரூ.3 லட்சம் தரவேண்டும் என்று கேட்டு மீண்டும் மிரட்டல் விடுத்தார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண், கொல்கத்தா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், அந்த வாலிபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அதில், அந்த செல்போன் எண், வடமதுரையை சேர்ந்த ராஜேந்திரனின் பெயரில் இருப்பது தெரியவந்தது.
கொல்கத்தா போலீசார் விசாரணை
இதனையடுத்து கொல்கத்தா போலீசார் வடமதுரை விரைந்தனர். பின்னர் உள்ளூர் போலீசார் உதவியுடன், ராஜேந்திரனிடம் கொல்கத்தா போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, முகவரி பற்றிய எந்த ஆவணத்தையும் வாங்காமல் வடமாநில வாலிபருக்கு சிம்கார்டு கொடுத்தது குறித்து போலீசார் துருவி, துருவி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் தனது பெயரிலேயே சிம்கார்டு வாங்கி கொடுத்தது ராஜேந்திரன் மீது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதற்காக வடமாநில வாலிபர் சிம்கார்டு வாங்கி சென்றதாக ராஜேந்திரன் கூறினார்.
வியாபாரி கைது
அதேநேரத்தில் வடமாநில வாலிபர், ராஜேந்திரனுக்கு மாதந்தோறும் பணம் அனுப்பியது போலீசாருக்கு தெரியவந்தது. இதனால் ராஜேந்திரனும், வடமாநில வாலிபருக்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்று போலீசார் கருதினர்.
இதைத்தொடர்ந்து வடமாநில வாலிபருக்கு உடந்தையாக இருந்ததாக ராஜேந்திரனை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த வாலிபரை கண்டுபிடிப்பதற்காக, ராஜேந்திரனை கொல்கத்தாவுக்கு போலீசார் அழைத்து சென்றனர்.