தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்து வருகிறதுதொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு


தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்து வருகிறதுதொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
x

குற்றச்சாட்டு

ஈரோடு

தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்து வருவதாக ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

நற்சான்றிதழ்

ஈரோடு கிழக்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து நேற்று அன்னை சத்யா நகர், திருநகர் காலனி, மரப்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தோ்தல் பிரசாரம் நடைபெற்றது.

இந்த பிரசாரத்தில் அமைச்சர்கள் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டு, கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர். அப்போது தொல்.திருமாவளவன் பேசும்போது கூறியதாவது:-

நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வெற்றியானது தமிழகத்தில் செயல்பட்டு வரும் தி.மு.க. அரசின் 1½ ஆண்டுகால செயல்பாட்டிற்கு மக்கள் நற்சான்றிதழ் அளிக்கும் தேர்தலாகும். இந்திய அளவில் சிறந்த முதல் -அமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார்.

நிதி ஒதுக்கீடு செய்யவில்லை

இன்றைக்கு நாடே பாராட்டும் வகையிலான ஆட்சியை செயல்படுத்தி வருவதாக சர்வே முடிவுகள் கூறுகின்றன. ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசானது தமிழகத்தையும், மக்களையும் புறக்கணித்து வருகிறது. தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்குவது கிடையாது. ஜி.எஸ்.டி. பிடித்தம் செய்யப்பட்ட நிதி திரும்ப வழங்கப்படாமல் உள்ளது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறைக்கு புதியதாக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையிலான திட்டங்கள் தான் பட்ஜெட்டில் உள்ளது.

கொடூர ஆட்சி

விவசாயிகளையும், தொழிலாளர்களையும் ஒடுக்கும் வகையிலான திட்டங்களை கொண்டு வருகிறது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வால் கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொடூர ஆட்சியாக மோடி ஆட்சி உள்ளது. இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்.

இதற்காக தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணி போல நாடு முழுவதும் ஒரு வலுவான கூட்டணி அமைய வேண்டியது அவசியமாகும். முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. என்ற கட்சி பல அணிகளாக பிரிந்து அப்படி ஒரு கட்சி இருப்பதே தெரியாத நிலைக்கு நிலைமை போய்விட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.

இதில் ஈரோடு மாநகராட்சி மண்டல தலைவர் பி.கே.பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story