அரசை கவிழ்க்க கவர்னர்கள் மூலம் மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது
பா.ஜனதா ஆளாத மாநிலங்களில் அந்த மாநில அரசை கவிழ்க்க கவர்னர்கள் மூலம் மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
பா.ஜனதா ஆளாத மாநிலங்களில் அந்த மாநில அரசை கவிழ்க்க கவர்னர்கள் மூலம் மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
பேட்டி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மயிலாடுதுறையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்றத்தில் துறைவாரி நிதி ஒதுக்கீடு தொடர்பான கூட்டத்தில் ஹிண்டன் பார்க் நிறுவன அறிக்கையின்படி அதானி மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்து கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது அதானியை பாதுகாப்பதற்கான முயற்சி போல் தெரிகிறது.
அரசை கவிழ்க்க முயற்சி
பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் அரசை கவிழ்க்கவும், சீர்குலைக்கவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை கவர்னர்கள் மூலம் செய்து வருகிறது. அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற துறைகளை தவறாக பயன்படுத்துகிறது. தமிழக கவர்னர் இதுவரை அரசு நிறைவேற்றிய 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்டத்தில் கையெழுத்திட்ட கவர்னர், அந்த மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளார். ஆன்லைன் சூதாட்டம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக 44 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுபற்றி கவர்னருக்கு கவலையில்லை.
பேச்சுவார்த்தை நடத்தும் கவர்னர்
ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பத்தை அழைத்து பேசாமல், சூதாட்டத்தை நடத்துபவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி மசோதாவை திரும்பி அனுப்பி உள்ளார். சுங்கச்சாவடி கட்டணம் 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 32 காலாவதியான சுங்கச்சாவடிகளில் பணம் வசூல் செய்யப்படுவதை தடுக்க வேண்டும்.
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கானது
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை, மக்களுக்கானது அல்ல. அது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கானது. உரம் மானியம் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்துக்கான மானியம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் துரைராஜ், ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.