நிலக்கரி திட்டம் ரத்து என மத்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்
காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி திட்டம் ரத்து என மத்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என தஞ்சையில் கி.வீரமணி கூறினார்.
காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி திட்டம் ரத்து என மத்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என தஞ்சையில் கி.வீரமணி கூறினார்.
ஆர்ப்பாட்டம்
தஞ்சை தலைமை தபால் அலுவலகம் முன்பு டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முயற்சிப்பதை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் நேற்றுமாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆா்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர், எல்லா மக்களுக்கும் சோறுபோடும் டெல்டாவின் அடையாளத்தை மாற்ற அவசரமாக நிலக்கரி எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்தியஅரசு முயற்சி செய்கிறது. இந்த பெரிய ஆபத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம் என்பதால் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.
எம்.பி., -எம்.எல்.ஏ.க்கள்
ஆர்ப்பாட்டத்தில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், தெற்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தமிழ்செல்வம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் சொக்காரவி, திராவிடர் கழக பொதுச் செயலாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் குணசேகரன், மண்டல தலைவர் அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட தலைவர் அமர்சிங் வரவேற்றார். முடிவில் மாவட்ட செயலாளர் அருணகிரி நன்றி கூறினார்.
பேட்டி
ஆர்ப்பாட்டத்துக்கு பின் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
நிலக்காி சுரங்கம் அமைப்பதில் இன்னும் சில பகுதிகள் ஏல அறிவிப்பில் இருந்து நீக்கப்படவில்லை என பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் தங்களது ஐயத்தைக் கூறியுள்ளனர். இந்த பிரச்சினை முழுமையாக தீர்ந்துவிட்டது என்பதற்கு மத்தியமந்திரியின் பதில் மட்டும் போதாது. நிலக்கரி திட்டம் ரத்து என மத்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்
டுவிட்டரில் கடந்த 6-ந் தேதி கொடுக்கப்பட்ட அறிவிப்பு இன்று (அதாவது நேற்று) ஏன்? வெளியிடப்பட வேண்டும். இந்த முக்கியமான கேள்விக்கு பா.ஜ.க.வினர் பதில் கூற வேண்டும். நிலக்கரி திட்டத்தை ரத்து செய்ய துரிதமாக செயல்பட்ட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.