சங்கிலி அறுந்து, சுவர் இடிந்தது: பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்தது
பரம்பிக்குளம் அணையில் சங்கிலி அறுந்து, சுவர் இடிந்ததால் மதகு உடைந்தது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் பரம்பிக்குளம் அணை உள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் காமராஜர் ஆட்சி காலத்தில் அணை கட்டப்பட்டது. 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையில் 17 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்கலாம். பரம்பிக்குளம் அணை கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதனால் பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவை எட்டியது. நீர்வரத்தை பொறுத்து 3 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
மதகு உடைந்தது
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 1.45 மணியளவில் பரம்பிக்குளம் அணையின் நடுவே உள்ள மதகில் இணைக்கப்பட்டு இருந்த சங்கிலி அறுந்து, மேலே இருந்த சுவர் (பீம்) இடிந்து மதகு மீது விழுந்து இருந்தது. இதனால் மதகு ஒருபுறம் வளைந்து சேதமடைந்தது. இதையடுத்து நீரின் அழுத்தம் காரணமாக மதகு உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறி கொண்டிருக்கிறது. அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் மதகு அடித்து செல்லப்பட்டு கிடந்தது.
அதிகாரிகள் ஆய்வு
இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், உடைந்த மதகு வழியாக வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறி கொண்டிருக்கிறது. மதகு உடைந்த இடத்தில் தண்ணீர் வெளியேறுவது நிற்க 2 முதல் 3 நாட்கள் ஆகும். இதனால் 5.7 டி.எம்.சி. தண்ணீர் அணையில் இருந்து வீணாகும். அணை முழு கொள்ளளவில் இருப்பதால் மதகை சீரமைப்பதில் சிக்கல் உள்ளது. உடைந்த மதகை சீரமைப்பதற்கு 1½ மாதங்கள் ஆகும் என்றனர்.
கேரளாவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்ததால் கேரளாவில் உள்ள சாலக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.