சாளுவனாற்றை தூர்வாரி கரையை உயர்த்த வேண்டும்


சாளுவனாற்றை தூர்வாரி கரையை உயர்த்த வேண்டும்
x

சாளுவனாற்றை தூர்வாரி கரையை உயர்த்த வேண்டும்

திருவாரூர்

கோட்டூர் அருகே சாளுவனாற்றை தூர்வாரி கரையை உயர்த்த வேண்டும். மேலும் சேதடைந்த ரெகுலேட்டரையும் சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாளுவனாறு

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே வேதபுரத்தில் கோரையாற்றிலிருந்து பிரிந்து செல்கிறது சாளுவனாறு. இந்த ஆறு களப்பால், வெங்கத்தான்குடி, வேதபுரம், மீனம்பநல்லூர், சீலத்தநல்லூர் மருதவனம், பண்டாரவாடை, நெடும்பலம் வழியாக சென்று, பின்னர் ஓவரூர் அருகே புதுப்பாண்டியாற்றில் கலக்கிறது.

வேதபுரத்தில் இருந்து நெடும்பலம் வரை 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று 3,700 எக்டேர் நிலப்பரப்பில் பாசன ஆறாக விரிந்து செல்கிறது. பைங்காட்டூர், வாட்டார், நல்லூர், அக்கறை கோட்டகம், திருக்களார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வடிகாலாக இது அமைந்துள்ளது.

தற்போது இந்த ஆற்றில் காட்டாமணக்கு செடிகளும், கருவேலமரங்களும், முட்செடிகளும் மண்டி கிடக்கிறது. ஆற்றின் படுகை பகுதிகள் தனியார் ஆக்கிரமிப்புகளில் உள்ளது. சாளுவனாற்றில் அமைந்துள்ள ரெகுலேட்டர் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே சாளுவனாற்றை தூர்வாரி அகலப்படுத்தி கரையை உயர்த்த வேண்டும். மேலும் ரெகுலேட்டரையும் சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூர்வாரி கரையை உயர்த்த வேண்டும்

அக்கரைக்கோட்டகத்ைத சேர்ந்த விவசாயி குமார்:- சாளுவனாறு பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் கடந்த காலத்தில் பெய்த கனமழை மற்றும்‌ புயல் வெள்ளத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இருகரைகளிலும் உடைப்பு ஏற்பட்டு மணல் மூட்டைகளால் கட்டப்பட்டுள்ளது. வாட்டர், நல்லூர், அக்கரைக்கோட்டகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வடிகாலாக அமைந்துள்ளது. மழை வெள்ள காலங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி பயிர்கள் அழிந்து மறு சாகுபடி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே சாளுவனாறில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி அகலப்படுத்தி கரையை உயர்த்த வேண்டும். மேலும் ஆற்றின் தென்கரையை தார்சாலையாக அமைக்க வேண்டும். இதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கோட்டூர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளுக்கு செல்ல பயன் உள்ளதாக இருக்கும் என்றார்.

ரெகுலேட்டரை சீரமைக்க வேண்டும்

சீலத்தநல்லூரை சேர்ந்த விவசாயி பாலன்:- சாளுவனாற்றில் கீழப்புத்தூரில் அமைந்துள்ள ரெகுலேட்டர் பழுதடைந்து பல ஆண்டுகளாக கிடக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறந்து விட்ட தண்ணீர் சாளுவனாற்றில் வரும் போது கீழப்புத்தூர், சீலத்தநல்லூர், மீனம்பநல்லூர், சோலைக்குளம், நெய்குணம், களப்பால், பட்டமடையான் உள்ளிட்ட கிராமங்களில் முழுமையாக தண்ணீர் கிடைக்காமல் 5ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை. இதனால் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சாளுவனாற்றிலிருந்து பிரிந்து செல்லும் ஏ, பிரிவு பாசன வாய்க்கால்கள் தூர்வாராமல் தூர்ந்து கிடக்கிறது. இதனால் பாசனத்திற்கு வரும் தண்ணீர் தடைப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சாளுவனாற்றில் அமைத்து உள்ள ரெகுலேட்டரை சீரமைத்து, பாசன வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story