பாப்பாரப்பட்டி அருகே பரிதாபம் காளியம்மன் கோவில் விழாவில் தேர் கவிழ்ந்து 2 பேர் பலி 5 பேர் படுகாயம்
பாப்பாரப்பட்டி அருகே காளியம்மன் கோவில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள்.. மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே காளியம்மன் கோவில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள்.. மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
காளியம்மன் கோவில் திருவிழா
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் கடந்த 10-ந்தேதி திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி 11-ந்தேதி தீமிதித்தல் மற்றும் கும்ப பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், சாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.
இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். மாலை 4 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர்நிலை சேர்வதற்கு 50 அடி தூரத்தில் தேர் திடீரென்று முன்புறமாக கவிழ்ந்தது. இதனால் தேரை இழுத்து வந்த பக்தர்கள் சிதறி ஓடினர்.
2 பேர் சாவு
இதில் தேருக்கு அடியில் சிக்கி பாப்பாரப்பட்டி சிவா காலனியை சேர்ந்த மனோகரன் (வயது 57), மாதேஅள்ளி கிராமத்தை சேர்ந்த சரவணன்( 60) உள்ளிட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த மாதேஅள்ளியை சேர்ந்த மாதேஷ், முருகேசன், பாப்பாரப்பட்டி அப்பு முதலி தெருவை சேர்ந்த முருகன் உள்ளிட்ட 5 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து 2 பேர் பலியான சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.